ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
x
தினத்தந்தி 14 April 2019 2:26 PM GMT (Updated: 14 April 2019 9:58 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி 7-வது வெற்றியை பெற்றது.

கொல்கத்தா,

8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த கிரிக்கெட் திருவிழாவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று மாலை நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின், சுனில் நரின், ஹாரி குர்னே ஆகியோர் திரும்பினார்கள். ஜோ டென்லி, கார்லஸ் பிராத்வெய்ட், லோக்கி பெர்குசன் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டனர். சென்னை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

‘டாஸ்’ ஜெயித்த சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரின் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் தீபக் சாஹர் பந்து வீச்சில் கிறிஸ் லின் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து தனது அதிரடியை தொடங்கினார். நிதானமாக ஆடிய சுனில் நரின் (2 ரன்) மிட்செல் சான்ட்னெர் பந்து வீச்சில் பாப் டுபிளிஸ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து நிதிஷ் ராணா களம் இறங்கினார். அடித்து ஆடிய கிறிஸ் லின் 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். 11-வது ஓவரில் நிதிஷ் ராணா (21 ரன்), ராபின் உத்தப்பா (0) விக்கெட்டை இம்ரான் தாஹிர் வீழ்த்தினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் கிறிஸ் லின் பந்தை நாலாபுறமும் விளாசி தள்ளினார். தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னெர் பந்து வீச்சில் சிக்சர் விளாசிய அவர் ரவீந்திர ஜடேஜா வீசிய ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்சர் தூக்கி அமர்க்களப்படுத்தினார். 13.1 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை எட்டியது.

அணியின் ஸ்கோர் 14.1 ஓவர்களில் 122 ரன்னாக உயர்ந்த போது கிறிஸ் லின் (82 ரன்கள், 51 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் ஷர்துல் தாகூரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து அதிரடி ஆட்டக்காரர் ஆந்த்ரே ரஸ்செல் 10 ரன்னும் (4 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 18 ரன்னும் (14 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

கடைசி ஓவரின் கடைசி 2 பந்துகளில் சுப்மான் கில் (15 ரன், 20 பந்துகளில்), குல்தீப் யாதவ் (0) ஆகியோர் ஆட்டம் இழந்தனர். 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. பியூஸ் சாவ்லா 4 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். சென்னை அணி தரப்பில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேன் வாட்சன் (6 ரன், 7 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்), பாப் டுபிளிஸ்சிஸ் (24 ரன்கள், 16 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) ஆகியோர் விரைவில் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து சுரேஷ் ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு (5 ரன்), கேதர் ஜாதவ் (20 ரன், 12 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோர் விக்கெட்டுகளை பியூஸ் சாவ்லா வீழ்த்தினார்.

5-வது விக்கெட்டுக்கு கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்தார். சென்னை அணி 13.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டோனி 13 பந்துகளில் ஒரு சிக்சருடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னாவுடன் கைகோர்த்தார். நிலைத்து நின்று ஆடிய சுரேஷ் ரெய்னா 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இந்த சீசனில் அவர் அடித்த முதல் அரைசதம் இதுவாகும். ரவீந்திர ஜடேஜாவும் கடைசி நேரத்தில் கச்சிதமாக செயல்பட்டு அணி வெற்றி இலக்கை எட்ட முக்கிய பங்களிப்பை அளித்தார்.

19.4 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா 42 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 58 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 17 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 31 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரின், பியூஸ் சாவ்லா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் ஆட்டநாயகன் விருது பெற்றார். 8-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். அந்த அணி இந்த சீசனில் 2-வது முறையாக கொல்கத்தாவை வீழ்த்தி இருக்கிறது. 8-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணி 4-வது தோல்வியை சந்தித்தது.

ஸ்கோர் போர்டு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கிறிஸ் லின் (சி) ஷர்துல் தாகூர்

(பி) இம்ரான் தாஹிர் 82

சுனில் நரின்(சி)பாப் டுபிளிஸ்சிஸ்

(பி) சான்ட்னெர் 2

நிதிஷ் ராணா (சி) பாப் டுபிளிஸ்சிஸ்

(பி) இம்ரான் தாஹிர் 21

உத்தப்பா(சி)பாப் டுபிளிஸ்சிஸ்

(பி) இம்ரான் தாஹிர் 0

தினேஷ் கார்த்திக் (சி) பாப்

டுபிளிஸ்சிஸ்(பி)ஷர்துல் தாகூர் 18

ஆந்த்ரே ரஸ்செல் (சி) சப்(துருவ்

ஷோரே) (பி) இம்ரான் தாஹிர் 10

சுப்மான் கில்(சி)ரவீந்திர ஜடேஜா

(பி) ஷர்துல் தாகூர் 15

பியூஸ் சாவ்லா (நாட்-அவுட்)    4

குல்தீப் யாதவ் (ரன்-அவுட்)    0

எக்ஸ்டிரா    9

மொத்தம் (20 ஓவர்களில்

8 விக்கெட்டுக்கு) 161

விக்கெட் வீழ்ச்சி: 1-38, 2-79, 3-80, 4-122, 5-132, 6-150, 7-161, 8-161.


பந்து வீச்சு விவரம்


தீபக் சாஹர்    4-0-36-0

ஷர்துல் தாகூர்    4-0-18-2

மிட்செல் சான்ட்னெர்    4-0-30-1

ரவீந்திர ஜடேஜா    4-0-49-0

இம்ரான் தாஹிர்    4-0-27-4

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஷேன் வாட்சன் எல்.பி.டபிள்யூ

(பி) ஹாரி குர்னே 6

பாப் டுபிளிஸ்சிஸ் (பி)

சுனில் நரின் 24

சுரேஷ் ரெய்னா (நாட்-அவுட்)    58

அம்பத்தி ராயுடு (சி) ராபின்

உத்தப்பா (பி) பியூஸ் சாவ்லா 5

கேதர் ஜாதவ் எல்.பி.டபிள்யூ

(பி) பியூஸ் சாவ்லா 20

டோனி எல்.பி.டபிள்யூ (பி)

சுனில் நரின் 16

ரவீந்திர ஜடேஜா(நாட்-அவுட்) 31

எக்ஸ்டிரா    2

மொத்தம் (19.4 ஓவர்களில்

5 விக்கெட்டுக்கு) 162

விக்கெட் வீழ்ச்சி: 1-29, 2-44, 3-61, 4-81, 5-121.

பந்து வீச்சு விவரம்

பிரசித் கிருஷ்ணா    4-0-30-0

ஹாரி குர்னே    4-0-37-1

ஆந்த்ரே ரஸ்செல்    1-0-16-0

சுனில் நரின்    4-1-19-2

குல்தீப் யாதவ்    3-0-28-0

பியூஸ் சாவ்லா    3.4-0-32-2

Next Story