டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2-வது முறையாக சாம்பியன்-பெரியசாமி அசத்தல் பந்து வீச்சு


டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2-வது முறையாக சாம்பியன்-பெரியசாமி அசத்தல் பந்து வீச்சு
x
தினத்தந்தி 15 Aug 2019 5:47 PM GMT (Updated: 15 Aug 2019 11:50 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை 2-வது முறையாக சொந்தமாக்கியது.

சென்னை,

4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், நேற்றிரவு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், திண்டுக்கல் டிராகன்சும் கோதாவில் இறங்கின.

இதில் ‘டாஸ்’ ஜெயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி கோபிநாத்தும், கங்கா ஸ்ரீதர் ராஜூவும் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். முதல் ஓவரிலேயே கில்லீஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜே.கவுசிக் வீசிய ஷாட்பிட்ச் பந்தை கோபிநாத் (0) தூக்கியடித்து கேட்ச் ஆனார். ஆடுகளத்தில் ஓரளவு பவுன்ஸ் காணப்பட்டது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் வெகுவாக நெருக்கடி கொடுத்தனர். கங்கா ஸ்ரீதர் ராஜூ (4 ரன்), அடுத்து வந்த நட்சத்திர வீரர் விஜய் சங்கர் (1 ரன்) ஆகியோரும் ஏமாற்றம் அளிக்க, கில்லீஸ் தடுமாற்றத்திற்கு உள்ளானது. ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய கேப்டன் கவுசிக் காந்தி 22 ரன்னிலும் (24 பந்து), விக்கெட் கீப்பர் சுஷில் 21 ரன்னிலும் வெளியேறினர். அப்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட்டுக்கு 55 ரன்களுடன் (11 ஓவர்) பரிதவித்தது.

இந்த சூழலில் சசிதேவும், முருகன் அஸ்வினும் கைகோர்த்து பொறுப்புடன் ஆடி அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். சசிதேவ் முடிந்த அளவு வேகம் காட்டினார். அபினவ், பிரனேஷ், ரோகித்தின் ஓவர்களில் சிக்சர் விரட்டி குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை உற்சாகத்தில் ஆர்ப்பரிக்க வைத்தார். 17.3 ஓவர்களில் கில்லீஸ் அணி 100 ரன்களை தாண்டியது.

அணியின் ஸ்கோர் 116 ரன்களாக உயர்ந்த போது சசிதேவ் (44 ரன், ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். இதன் பின்னர் இறுதி ஓவரில் முருகன் அஸ்வின் ஒரு சிக்சர் பறக்க விட்டு அசத்தினார். அந்த ஓவரில் ரன்-அவுட் மூலம் 2 பேர் வீழ்ந்ததால் 130 ரன்களை தாண்ட முடியாமல் போய் விட்டது. திண்டுக்கல் அணி பந்து வீச்சு மட்டுமின்றி, பீல்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டதால் கில்லீஸ் அணியின் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட குறைந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது. முருகன் அஸ்வின் 28 ரன்களுடன் (27 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.

பின்னர் 127 ரன்கள் இலக்கை நோக்கி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆடியது. அந்த அணியின் கேப்டன் ஜெகதீசன் (0), அடுத்து வந்த சதுர்வேத் (0) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் பெரியசாமி ஒரே ஓவரில் காலி செய்தார். மற்றொரு வீரர் ஹரி நிஷாந்த் (4 ரன்) விஜய் சங்கரின் பந்து வீச்சில் வீழ்ந்தார். 4 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை தாரைவார்த்து திண்டுக்கல் திண்டாட, கில்லீஸ் பவுலர்கள் உற்சாகமடைந்தனர்.

அடுத்து வந்த திண்டுக்கல் வீரர்கள் அணியை தூக்கி நிறுத்த போராடினர். ஆனால் கில்லீசின் அட்டகாசமாக பந்து வீச்சு அவர்களை மிரள வைத்தது. அபினவ் 21 ரன்னிலும், சிறிது நேரம் மிரட்டிய விவேக் 23 ரன்னிலும் (15 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), சுமந்த் ஜெயின் 46 ரன்னிலும் வெளியேற ஆட்டம் முழுமையாக கில்லீஸ் பக்கம் திரும்பியது.

கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பெரியசாமி வீசினார். இந்த ஓவரில் 3 விக்கெட்டுகளை கபளகரம் செய்த பெரியசாமி 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து கில்லீஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

திண்டுக்கல் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 114 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. கில்லீஸ் பவுலர் பெரியசாமி 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹீரோவாக ஜொலித்தார். அவரே ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டி.என்.பி.எல். கோப்பையை வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2017-ம் ஆண்டிலும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பட்டம் வென்று இருந்தது. இதன் மூலம் டி.என்.பி.எல். கோப்பையை 2 முறை வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் படைத்திருக்கிறது.

டி.என்.பி.எல். தொடரை பொறுத்தவரை லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் கோப்பையை வென்றதில்லை. அந்த துரதிர்ஷ்டம் இந்த முறை திண்டுக்கல் டிராகன்சையும் (புள்ளி பட்டியலில் முதலிடம்) விட்டு வைக்கவில்லை. தொடர்ந்து 2-வது முறையாக இறுதி ஆட்டத்திற்கு வந்து அந்த அணி தோற்று இருக்கிறது.

வாகை சூடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடம் பிடித்த திண்டுக்கல் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

ஸ்கோர் போர்டு

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

கங்கா ஸ்ரீதர் ராஜீ (சி) அபினவ்

(பி) ரோகித் 4

கோபிநாத் (சி) சிலம்பரசன்

(பி) கவுசிக் 0

கவுசிக் காந்தி (சி) முகமது

(பி) அபினவ் 22

விஜய் சங்கர் (சி) ஜெகதீசன்

(பி) கவுசிக் 1

சுஷில் (ஸ்டம்பிங்) ஜெகதீசன்

(பி) அபினவ் 21

சசிதேவ் (ரன்-அவுட்)    44

முருகன் அஸ்வின்(நாட்-அவுட்) 28

ஹரிஷ் குமார் (ரன்-அவுட்)    1

சித்தார்த் (ரன்-அவுட்)    0

எக்ஸ்டிரா    5

மொத்தம் (20 ஓவர்களில்

8 விக்கெட்டுக்கு ) 126

விக்கெட் வீழ்ச்சி: 1-1, 2-18, 3-19, 4-43, 5-55, 6-116, 7-124, 8-126


பந்து வீச்சு விவரம்

ஜே.கவுசிக்    4-0-22-2

ஆர்.ரோகித்    4-0-30-1

சிலம்பரசன்    2-0-11-0

அபினவ்    4-0-16-2

பிரனேஷ்    3-0-22-0

முகமது    3-0-23-0

திண்டுக்கல் டிராகன்ஸ்

ஹரிநிஷாந்த் (சி) சித்தார்த்

(பி) விஜய் சங்கர் 4

ஜெகதீசன் (சி)முருகன் அஸ்வின்

(பி) பெரியசாமி 0

சதுர்வேத் எல்.பி.டபிள்யூ (பி)

பெரியசாமி 0

சுமந்த் ஜெயின் (சி) ஹரிஷ்குமார்

(பி) அலெக்சாண்டர் 46

அபினவ் (சி) அலெக்சாண்டர்

(பி) ஹரிஷ்குமார் 21

விவேக் (சி) சுஷில் (பி)

அலெக்சாண்டர் 23

முகமது (சி) விஜய்சங்கர் (பி)

பெரியசாமி 15

ரோகித் (சி) சசிதேவ் (பி)

பெரியசாமி 2

பிரனேஷ் (நாட்-அவுட்)    1

ஜே.கவுசிக் (பி) பெரியசாமி    0

சிலம்பரசன் (நாட்-அவுட்)    1

எக்ஸ்டிரா 1

மொத்தம் (20 ஓவர்களில்

9 விக்கெட்டுக்கு) 114

விக்கெட் வீழ்ச்சி: 1-0, 2-0, 3-4, 4-53, 5-91, 6-104, 7-112, 8-112, 9-113


பந்து வீச்சு விவரம்

விஜய்சங்கர்    4-1-19-1

பெரியசாமி    4-1-15-5

அலெக்சாண்டர்    4-0-24-2

முருகன் அஸ்வின்    4-0-25-0

சித்தார்த்    2-0-13-0

ஹரிஷ்குமார்    2-0-18-1

கவனத்தை ஈர்த்த பெரியசாமி

5 விக்கெட் வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வேகப்பந்து வீச்சாளர் பெரியசாமியை சக வீரர்கள் தூக்கி வைத்து கொண்டாடிய காட்சி.
இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை சாய்த்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வேகப்பந்து வீச்சாளர் பெரியசாமி நடப்பு தொடரில் மொத்தம் 21 விக்கெட்டுகளை அறுவடை செய்திருக்கிறார். இதன் மூலம் ஒரு டி.என்.பி.எல். தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை பெற்றார். மலிங்கா பாணியில் பந்து வீசும் பெரியசாமி யார்க்கராக வீசுவதில் வல்லவர். இந்த டி.என்.பி.எல். போட்டியில் அவரது பந்து வீச்சு அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் கூறியிருந்தார். அவரது கணிப்புபடியே சேலம் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான பெரியசாமி இந்த சீசனில் வியக்க வைத்து விட்டார்.

Next Story