அதிரடியில் மிரட்டிய ருதுராஜ் “100” : சென்னை அணி 189 ரன்கள் குவிப்பு!


அதிரடியில் மிரட்டிய ருதுராஜ் “100” : சென்னை அணி 189 ரன்கள் குவிப்பு!
x
தினத்தந்தி 2 Oct 2021 4:02 PM GMT (Updated: 2 Oct 2021 4:02 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அபு தாபி,

இன்று நடைபெற்று வரும் 47-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடினர். இதனால் பவர்-பிளே முடிவில் சென்னை அணி 44 ரன்கள் சேர்த்தது. டு பிளிஸ்சிஸ் 25 (19) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து வந்த மொயின் அலி நல்ல ஒத்துழைப்பு தர, இந்த ஜோடி 57 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எடுத்தது. இதனையடுத்து மொயின் அலி 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். நாலாபக்கமும் பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். அவர் அடித்த சிக்சர்கள் ஆடுகளத்தை தாண்டி வெளியே பறந்தன. சிறப்பாக  ஆடிய  அவர் 60 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 90 ரன்கள் குவித்து அசத்தினார்.

அடுத்து களமிறங்கிய ஜடேஜாவும் அதிரடியில் கலக்க சென்னை அணியின் ரன் ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. கடைசி 25 பந்துகளில் 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கலக்கினர். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தனது முதல் சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். 

இறுதியில் அதிரடியில் மிரட்டிய ருதுராஜ் கெய்க்வாட் 101 (60) ரன்களும், ஜடேஜா 32 (15) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சென்னை அணி 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ராகுல் திவாட்டியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story