மும்பை டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 325 ரன்களுக்கு ஆல் அவுட்


மும்பை டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 325 ரன்களுக்கு ஆல் அவுட்
x
தினத்தந்தி 4 Dec 2021 7:56 AM GMT (Updated: 4 Dec 2021 7:56 AM GMT)

மும்பை டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை,

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும், சஹா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் சஹா 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த அஸ்வின் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். 

அதன் பின்னர் களமிறங்கிய அக்சர் பட்டேல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மயங்க் அகர்வால் - பட்டேல் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்களை உயத்தினர்.

2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 146 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

உணவு இடைவேளைக்கு பின் களமிறங்கிய அகர்வால் - பட்டேல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 311 பந்துகளை சந்தித்த மயங்க் அகர்வால் 150 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதேபோல், 128 பந்துகளை சந்தித்த அக்சர் படேல் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 

ஆனால், அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து தரப்பில் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 119 ரன்களை விட்டுக்கொடுத்து இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.     

Next Story