சுரேஷ் ரெய்னாவை, ஏலத்தில் எடுக்காதது ஏன்? சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செயல் அதிகாரி விளக்கம்


சுரேஷ் ரெய்னாவை, ஏலத்தில் எடுக்காதது ஏன்? சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செயல் அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 14 Feb 2022 5:03 PM GMT (Updated: 14 Feb 2022 5:03 PM GMT)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னாவை, ஏலத்தில் எடுக்காதது ஏன் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. 15-வது ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பெங்களூருருவில் நேற்று தொடங்கியது. 2 நாட்களாக நடைபெற்று வந்த ஏலம் இன்று முடிவடைந்தது. இந்த ஏலத்தில் 204 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகபட்ச விலையாக இஷான் கிஷன் ரூ.15.25 கோடிக்கு ஏலம் போனார். ஆனால் ‘மிஸ்டர் ஐ.பி.எல்’ என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ‘மிஸ்டர் ஐ.பி.எல்’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. இடது கை ஆட்டக்காரரான அவருக்கு இப்போது 35 வயதாகிறது. 
 
ஏதாவது ஒரு அணி ரெய்னாவை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நிமிடம் வரை அவரை எடுத்துக் கொள்ள, சென்னை அணி உட்பட எந்த அணியும் முன்வரவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா ஏலத்தில் எடுக்கப்படாதது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 இந்தநிலையில், இதுகுறித்து சி.எஸ்.கே. அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது,

 'கடந்த 12 வருடங்களாக சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் நிலையான ஆட்டக்காரராக திகழ்ந்தார். சென்னை அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காதது எங்களுக்கும் மிகவும் வருத்தமாகவே இருந்தது. ஆனால், அணியின் தேவையை கருத்தில் கொண்டே வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். மற்ற அனைத்தையும் விட அணியின் தேவையே முக்கியம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த அணியில் சுரேஷ் ரெய்னாவிற்கான தேவை இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. இதன் காரணமாகவே அவரை நாங்கள் எடுக்கவில்லை. இதேபோல் கடந்த பத்தாண்டுகளாக அணியில் இருந்து வந்த டூ பிளசிஸையும், சுரேஷ் ரெய்னாவையும் நிச்சயமாக அனைவரும் மிஸ் செய்கிறொம். சென்னை அணியில் அவர்களது இடத்தை நிரப்புவது எளிதான காரியம் அல்ல' இவ்வாறு அவர் கூறினார்.

Next Story