பெண்கள் உலக கோப்பை; 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி


image courtesy:  NDTV
x
image courtesy: NDTV
தினத்தந்தி 22 March 2022 8:18 AM GMT (Updated: 22 March 2022 8:18 AM GMT)

பெண்கள் உலக கோப்பை போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியால் அரையிறுதிக்கு செல்வதற்கான நம்பிக்கை அதிகரித்து உள்ளது.


ஹாமில்டன்,


பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன.  இதில் இன்று நடந்த 22வது லீக் ஆட்டத்தில் இந்திய மற்றும் வங்காளதேச அணிகள் விளையாடின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மந்தனா - ஷபாலி வர்மா ஜோடி சிறப்பாக விளையாடினர். ஷபாலி வர்மா 42 ரன்கள் எடுத்த நிலையிலும் ஸ்ம்ரிதி மந்தனா 30 ரன்களிலும் வெளியேறினர். ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய யாஷிகா பாட்டியா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

பின்வரிசையில் ரிச்சா கோஷ் 26 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் அளித்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்துள்ளது.  இதனையடுத்து 230 ரன்கள் வெற்றி இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது.

தொடக்க வீராங்கனைகளில் மூர்ஷிடா கட்டூன் (19), ஷார்மின் அக்தர் (5) ரன்களிலும் வெளியேறினர்.  கேப்டன் நிகர் உள்பட அடுத்தடுத்து வந்த 3 வீராங்கனைகளும் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி ஏற்படுத்தினர்.

எனினும், அடுத்து விளையாடிய லதா மொண்டல் (24) மற்றும் சல்மா கட்டூன் இணை (32) சற்று நின்று விளையாடி அணிக்கு ரன் சேர்ப்பதில் முனைப்பு காட்டியது.  ரீத்து (16), பஹீமா கட்டூன் (1), நகிடா அக்தர் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர்.  ஜஹானாரா 11 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

அந்த அணி 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களே எடுத்தது.  இதனால், 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியை பொறுத்தமட்டில் இரு லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும். எனவே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களம் கண்டது.  இதில், இன்று நடந்த போட்டியில் பெற்ற வெற்றியால் ரன் விகிதம் உயர்ந்து உள்ளது.  அட்டவணையில் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.  இதனால், இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு செல்வதற்கான நம்பிக்கை அதிகரித்து உள்ளது.



Next Story