பெண்கள் உலகக்கோப்பை: இங்கிலாந்து அணியை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலிய அணி


Image Courtesy : @cricketcomau
x
Image Courtesy : @cricketcomau
தினத்தந்தி 3 April 2022 8:15 AM GMT (Updated: 3 April 2022 8:15 AM GMT)

பெண்கள் உலகக்கோப்பை தொடரில் 7-வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கிறிஸ்ட்சர்ச்,

பெண்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க வீராங்கணைகளாக அலிக்சா ஹீலியும், ராகேல் ஹெய்னசும் களமிறங்கினர். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர்.

ராகேல் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அலிக்சா ஹீலி சதம் அடித்து அசத்தினார். அவர் 138 பந்துகளில் 170 ரன்கள் குவிதார். இதில் 26 பவுண்டரிகள் அடங்கும். பெத் மூனி 62 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்துள்ளது.

இதையடுத்து இங்கிலாந்து அணி, உலகக்கோப்பையை தனதாக்க 357 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாட தொடங்கியது.

தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய டாம்மி பியூமான்ட் 27 ரன்களிலும் வ்யாட் 4 ரன்களிலும்  வெளியேறினர். அதை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹெதர் 26 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

அதே நேரத்தில் சிறப்பாக விளையாடிய நாட் சிவேர் சதம் அடித்து அசத்தினார். ஒரு முனையில் அவர் அதிரடி காட்டினாலும் மறுமுனையில் விக்கெட்கள் மளமளவென சரிந்தன. இறுதியில் இங்கிலாந்து அணி 43.4 ஓவர்களில் 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.
 
நாட் சிவேர்148 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பை பட்டதை தட்டி சென்றது.

12-வது முறையாக நடைபெற்ற  பெண்கள் உலகக்கோப்பை தொடரில் 7-வது முறையாக ஆஸ்திரேலிய அணி பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story