20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஆல்ரவுண்டர்கள் இருப்பது அணிக்கு சிறந்தது- ஷர்துல் தாக்குர்


Image Courtesy : Twitter / IPL
x
Image Courtesy : Twitter / IPL
தினத்தந்தி 12 April 2022 10:32 AM GMT (Updated: 12 April 2022 10:32 AM GMT)

ஆல்ரவுண்டர்களின் முக்கியத்துவம் குறித்து டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஷர்துல் தாக்குர் பேசியுள்ளார்.

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சீசன் வரை சென்னை அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக விளங்கி வந்த ஷர்துல் தாக்குர் இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணியால்  வாங்கப்பட்டார்.

தற்போது வரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 2 வெற்றி 2 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஆல்ரவுண்டர்களின் முக்கியத்துவம் குறித்து ஷர்துல் தாக்குர் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், " ஒவ்வொரு போட்டியிலும் என்னால் முடிந்த தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே விளையாடி வருகிறேன். 20 ஓவர் போட்டிகளில்  ஒரு அணியில் அதிக ஆல்ரவுண்டர்கள் இருந்தால் அது அந்த அணிக்கு சிறந்ததாகும். எங்கள் அணியில் அதிக ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் தான் பேட்டிங் வரிசை ஆழமாக உள்ளது. 

தொடக்க வீரர்கள்  விக்கெட்டுகளை விரைவாக இழந்தால், 6,7 மற்றும் 8-வது வரிசையில் பேட்டிங் செய்யும் வீரர்களின் பங்கு முக்கியமானது.  அணிக்குள் சூழல் மிகவும் நன்றாக உள்ளது. அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர்.

தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எப்போதுமே எங்களுடைய இயல்பான விளையாட்டை விளையாட வேண்டும் என்று கூறுவார். அவர் எங்களை எப்போதும் ஆதரித்து செல்பவர். அதனால் தான் நாங்கள் எப்போதும் எங்களின் சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சிக்கிறோம் " என அவர் தெரிவித்தார்.

Next Story