"உங்கள் ஆட்டத்தை பார்த்து ஏபி டிவில்லியர்ஸ் நிச்சயம் பெருமைப்படுவார்" - தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்த கோலி


Image Courtesy : Twitter / @IPL
x
Image Courtesy : Twitter / @IPL
தினத்தந்தி 17 April 2022 8:00 AM GMT (Updated: 17 April 2022 8:00 AM GMT)

"மேன் ஆப் தி ஐபிஎல்" என தினேஷ் கார்த்திக்-கிற்கு விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

மும்பை,

ஐபிஎல் 15ஆவது சீசனின் நேற்று நடந்த  27ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியில் டூ பிளஸி 8 (11), அனுஜ் ராவத் 0 (1) கோலி 12 (14) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் 34 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் தொடக்கத்தில் நிதானம் காட்டினாலும் முஷ்தபிசுர் ரகுமான் வீசிய 18ஆவது ஓவரில்  தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்களை விளாசி 28 ரன்களை குவித்து, 27 பந்துகளில் அரை சதம் எடுத்தார். 

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 189/5 ரன்களை குவித்தது. 190 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் போட்டிகளில் சமீப காலமாக போட்டி முடிந்த பிறகு வெற்றி பெற்ற அணியின் இரு வீரர்கள் மைதானத்தில் நேர்காணலில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும்.

இந்த நிலையில் நேற்று போட்டி முடிந்த பிறகு தினேஷ் கார்த்திக்-யிடம் விராட் கோலி சிறப்பு நேர்காணல் நடத்தினார். அப்போது கோலி பேசுகையில்," நான் இதுபோன்ற நேர்காணலை அதிகம் செய்யவில்லை. ஆனால் இப்போது நான் இங்கு இருக்கிறேன். இன்று இதை செய்வதற்கு ஒரு சிறப்பான இரவு. இதுவரை இந்த தொடரின் 'மேன் ஆஃப் தி ஐபிஎல்'  நாயகனுடன் நான் இங்கே இருக்கிறேன்" என கூறினார். 

பின்னர் அவர் கார்த்திக்கிடம் இந்த ஐபிஎல் தொடருக்கு அவர் தயாரான விதம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கார்த்திக், " நான் ஒரு பெரிய இலக்கை வைத்திருக்கிறேன் என முதலில் சொல்லி கொள்கிறேன்.  நான் உண்மையில் கடுமையாக உழைத்து வருகிறேன்.  நாட்டுக்கு சிறப்புடன் ஏதேனும் செய்ய வேண்டும் என்பது எனது நோக்கம்.

அது எனது பயணத்தின் ஒரு பகுதியாகும்.  இந்திய கிரிக்கெட் அணியின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில்  இடம் பெறுவதற்காக ஒவ்வொரு விசயத்திலும் நான் முயன்று கொண்டிருக்கிறேன்" என தெரிவித்தார்.

பின்னர் பேசிய கோலி, " நீங்கள் உங்கள் இலக்குகளில் மிகவும் தெளிவாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏபி டிவில்லியர்ஸ் நிச்சயம் இதை பார்த்து பெருமைப்படுவார். வீட்டில் இருந்து உங்கள் ஆட்டத்தை பார்த்தும் நீங்கள் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதை கண்டும் அவர் நிச்சயம் உங்களை பார்த்து பெருமை கொள்வார் " என கோலி தெரிவித்தார்.

Next Story