"சிறந்த அணியிடம் தான் வீழ்ந்தோம்"- குஜராத்துக்கு எதிரான தோல்வி குறித்து வில்லியம்சன் கருத்து


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 28 April 2022 12:12 PM GMT (Updated: 28 April 2022 12:12 PM GMT)

இறுதி ஓவரில் ரஷித் கான் அதிரடியால் குஜராத் அணி வெற்றி பெற்றது.

மும்பை,

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில்  ஐதராபாத் - குஜராத் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. 196 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி இறுதி ஓவரில் திவேதியா - ரஷித் கான் அதிரடியால் 22 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு பேசிய ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், "இது ஒரு அற்புதமான கிரிக்கெட் போட்டியாகும். 40 ஓவர்கள் முழுவதும் சிறப்பாக இருந்தது. நாங்கள் நெருங்கி வந்துதான் தோற்றுள்ளோம். 

இதனால் நாங்கள் நேர்மறையாக இருக்கிறோம். சிறந்த அணியிடம்தான் நாங்கள் வீழ்ந்துள்ளோம். குஜராத் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

ரஷீத்கான் ஏற்கனவே இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் மீண்டும் சிறப்பாக ஆடி உள்ளார். இந்த போட்டி மூலம் நாங்கள் ஏராளமான விஷயங்களை கற்றோம். ஆனால் அதே நேரத்தில் 2 சிறந்த அணிகள் மோதும் போது இது மாதிரி நடக்கலாம். கடைசி ஓவரை வீசிய ஜான்சென் மீண்டும் பலம் பெற்று திரும்புவார் " என தெரிவித்தார்.

ஐதராபாத் அணி தங்கள் அடுத்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை வரும்  31ந் தேதி எதிர் கொள்கிறது.

Next Story