"நோ பால், வைட்" பந்துகளுக்கு தொடரும் சர்ச்சை முடிவு-டிஆர்எஸ் கோரிக்கை விடுத்த முன்னாள் வீரர்


Image Courtesy : Twitter
x
Image Courtesy : Twitter
தினத்தந்தி 3 May 2022 3:30 PM GMT (Updated: 3 May 2022 3:30 PM GMT)

வைட்,நோ பால் பந்துகளுக்கும் டிஆர்எஸ் அனுமதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் பேட்டிங் போது கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 19-வது ஓவரில் பிரஷித் கிருஷ்ணா வீசிய 4வது பந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்பாக வீச, அதனை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அடிப்பதற்காக வைட் லைன் வரை சென்றுவிட்டார். எனினும் அம்பயர் அதற்கு வைட் பந்து என அறிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கேப்டன் சஞ்சு சாம்சன், நடுவரின் முடிவை எதிர்த்து டிஆர்எஸ் கேட்டார். வைட் பந்துக்கு டிஆர்எஸ் எடுக்கமுடியாது என்ற விதி இருக்கிறது. இதனால் சாம்சன் சில நிமிடம் நடுவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் ஆட்டம் தொடர்ந்தது.

இந்த ஐபிஎல்-லில் நடுவர் முடிவு சர்ச்சையை ஏற்படுத்துவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நோ பால் சர்ச்சை காரணமாக டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரி வைட் மற்றும் நோ பால் பந்துகளுக்கும் டிஆர்எஸ் அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் "பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பல முறை நடுவர்கள் தவறாக முடிவுகள் வழங்குவதை பார்த்துவிட்டோம். எனவே நடுவர்களின் அந்த தவறுகளை சரிசெய்வதற்கு வீரர்களுக்கு சில வழிகளைக் வழங்க வேண்டும். அதனால்தான் டிஆர்எஸ் கொண்டு வரப்பட்டது. 

தவறுகளை சரிசெய்ய "வைடு மற்றும் நோ பால் " பந்துகளுக்கு 3-வது நடுவரை அணுகும் டிஆர்எஸ் கொண்டு வரப்படுவதை நான் பார்க்க விரும்புகிறேன். இது குறித்து வீரர்கள் சிறந்த முடிவை எடுப்பவர்களாக உள்ளனர் " என தெரிவித்தார்.

Next Story