சேலம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரியால் பரபரப்பு போக்குவரத்து பாதிப்பு


சேலம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரியால் பரபரப்பு போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 4 Jan 2017 11:00 PM GMT (Updated: 4 Jan 2017 8:51 PM GMT)

சேலம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரியால் பரபரப்பு போக்குவரத்து பாதிப்பு

கருப்பூர்,

சேலம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

லாரியில் தீ

அரியலூரில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு தொழிற்சாலையில் இருந்து, சிமெண்டில் சேர்க்க பயன்படும் வேதிபொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கர்நாடக மாநிலத்துக்கு புறப்பட்டது. அந்த லாரியை சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த சேட்டு (வயது 41) என்பவர் ஓட்டிச்சென்றார்.

இந்த லாரி நேற்று காலை 11 மணியளவில் சேலம் அருகே கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் எதிரில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியின் பின்பகுதியில் தீப்பிடித்தது. வேதிபொருள் என்பதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதை கவனித்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிலர் விரைந்து சென்று லாரி டிரைவரிடம் இதுபற்றி தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து லாரியை சேட்டு உடனே நிறுத்திவிட்டு வேகமாக கீழே இறங்கினார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஓமலூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை அடித்து அணைத்தனர்.

ஆனாலும் லாரி தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுதொடர்பாக சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story