செய்யாறில் நடந்த சம்பவத்தில் திருப்பம் சொத்துகளை விற்று மகள்களுக்கு தர முடிவு செய்ததால் விவசாயி கொலை நாடகமாடிய மகன் நண்பருடன் கைது


செய்யாறில் நடந்த சம்பவத்தில் திருப்பம் சொத்துகளை விற்று மகள்களுக்கு தர முடிவு செய்ததால் விவசாயி கொலை நாடகமாடிய மகன் நண்பருடன் கைது
x
தினத்தந்தி 4 Jan 2017 11:00 PM GMT (Updated: 4 Jan 2017 8:51 PM GMT)

செய்யாறில் நடந்த சம்பவத்தில் திருப்பம் சொத்துகளை விற்று மகள்களுக்கு தர முடிவு செய்ததால் விவசாயி கொலை நாடகமாடிய மகன் நண்பருடன் கைது

செய்யாறு,

செய்யாறு அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நாடகமாடிய அவரது மகனை போலீசார் நண்பருடன் கைது செய்தனர். சொத்துகளை விற்று பணத்தை மகள்களுக்கு தர முடிவு செய்ததால் ஆத்திரம் அடைந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

விவசாயி கொலை

செய்யாறு டவுன் பகுதி வெங்கட்ராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம் கடந்த 31-ந் தேதி அவரது நிலத்தில் கழுத்து பகுதியில் வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை குறித்து செய்யாறு போலீஸ் துணை சூப்பிரண்டு எம்.பி.திவ்யா மற்றும் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மின்மோட்டார் வயர்கள் அறுந்து கிடந்ததால் அதனை திருட வந்தவர்கள் ஆறுமுகத்தை கொலை செய்திருக்கலாம் என முதலில் கருதப்பட்டது. ஆறுமுகத்திற்கு மனைவியும் 2 மகள் மற்றும் 2 மகன் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.

கொலையுண்ட ஆறுமுகம் பயன்படுத்திய செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது அவரிடம் மகன் மணிவண்ணன் பேசியது தெரியவந்தது. இதனையடுத்து குடும்பத்தினரிடம் விசாரித்தபோது “ஆறுமுகம் தனது மகள்கள் மீது அதிக பாசம் வைத்திருந்தார். சொத்துகளை விற்று பணத்தை மகள்களுக்கு கொடுக்கப்போவதாக மகன் மணிவண்ணனிடம் கூறியிருந்தார். இதனால் தந்தை மீது மணிவண்ணன் ஆத்திரம் அடைந்த நிலையில் இருந்துள்ளார்” என்ற தகவல் தெரியவந்தது.

எனவே இந்த கொலையில் ஆறுமுகத்தின் மகன் மணிவண்ணன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை அழைத்து விசாரித்தபோது தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகின.

தந்தை ஆறுமுகம் அவரது சொத்துகளை விற்று பணத்தை மகள்களுக்கு கொடுக்கப்போவதாக கூறினார். ஆறுமுகம் உயிருடன் இருந்தால் தானே சொத்துகளை விற்று பணத்தை மகள்களுக்கு தரமுடியும், தந்தையை கொன்றுவிட்டால் சொத்து தனக்கு வந்து சேர்ந்து விடும் என மணிவண்ணன் கருதினார்.

மோட்டார்சைக்கிளில்....

இந்த திட்டத்தை பெருங்களத்தூர் கிராமத்தில் வசிக்கும் நண்பர் சிவக்குமாரிடம் கூறியுள்ளார். சம்பவத்தன்று ஆறுமுகம் தனியாக நிலத்திற்கு செல்வதை நோட்டமிட்ட அவர் நண்பர் சிவக்குமாருக்கு தெரிவித்து வரவழைத்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று நிலத்தின் அருகே நிறுத்திவிட்டு தந்தை ஆறுமுகத்தை கொலை செய்ய சிவக்குமாரை அனுப்பியுள்ளார். ஆறுமுகத்தை பின்தொடர்ந்து சென்ற சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

நாடகம் ஆடியவர்

ஆனால் கொலை நடந்தபோது போலீசார் மற்றும் பொதுமக்களின் கவனத்தை திசைத்திருப்ப திருட்டு சம்பவம் நடந்தது போல மின்மோட்டார் வயர்களை அறுத்துவிட்டு கொலைசெய்ய பயன்படுத்திய கத்தி மற்றும் கையுறையை செய்யாறு ஆற்று படுகையில் இருவரும் வீசியுள்ளனர்.

சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை செய்யும்போது பொதுமக்களுடன் தானும் ஒண்ணும் தெரியாதது போல மணிவண்ணன் தந்தை ஆறுமுகம் பற்றிய விவரத்தை எந்த வித பதட்டமும் இல்லாமல் கூறி தன் மீது சந்தேகம் வராத வகையில் நாடகம் ஆடியுள்ளார். ஆறுமுகத்தின் போன் அழைப்பை ஆய்வு செய்தபோதுதான் மகனே நண்பரை வைத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மணிவண்ணன் மற்றும் அவரது நண்பர் சிவக்குமாரை செய்யாறு போலீசார் கைது செய்தனர்.

Next Story