கட்டிடக்கலை வடிவமைப்பில் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்க வேண்டும் வி.ஐ.டி.யில் நடந்த சர்வதேச கருத்தரங்கு தொடக்க விழாவில் ஜி.விசுவநாதன் பேச்சு


கட்டிடக்கலை வடிவமைப்பில் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்க வேண்டும் வி.ஐ.டி.யில் நடந்த சர்வதேச கருத்தரங்கு தொடக்க விழாவில் ஜி.விசுவநாதன் பேச்சு
x
தினத்தந்தி 4 Jan 2017 10:45 PM GMT (Updated: 4 Jan 2017 8:52 PM GMT)

கட்டிடக்கலை வடிவமைப்பில் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்க வேண்டும் வி.ஐ.டி.யில் நடந்த சர்வதேச கருத்தரங்கு தொடக்க விழாவில் ஜி.விசுவநாதன் பேச்சு

வேலூர்,

‘கட்டிடக்கலை வடிவமைத்தலில் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்க வேண்டும்’ என்று வி.ஐ.டி.யில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.

சர்வதேச கருத்தரங்கு

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வி-ஸ்பார்க் எனப்படும் கட்டிடக்கலைப் பள்ளி நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் உள்ள வேலூர் கட்டிடக்கலை ஆய்வகத்துடன் இணைந்து நவீன உலகத்துக்கு ஏற்ற வகையில் கட்டிடக்கலை வடிவமைப்பில் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குதல் பற்றிய சர்வதேச கருத்தரங்கை வி.ஐ.டியில் நடத்துகிறது.

9 நாட்கள் நடக்கும் இக்கருத்தரங்கில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புதுச்சேரி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள கட்டிடக்கலை பள்ளிகளின் மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள், நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கம் தொடக்க விழாவுக்கு வி.ஐ.டி. வி-ஸ்பார்க் பள்ளி இயக்குனர் தேவிபிரசாத் வரவேற்றார். நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து தொழில் நுட்ப பல்கலைக்கழகக் கட்டிடக்கலை பேராசிரியை ப்ளேயர் பால்மர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது அவர், ‘கட்டிடக்கலை வடிவமைப்பில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கட்டிடக்கலைத் துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. கட்டிடக்கலை வடிவமைப்பில் புதிய தொழில் நுட்பங்களை மாணவர்கள் உருவாக்க வேண்டும்’ என்றார்.

வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தொழில் நுட்பங்கள்

நாளுக்கு நாள் கட்டிடக்கலை வளர்ந்து வருகிறது. அதற்கு தகுந்த வகையில் கட்டிடக்கலை நிபுணர்கள் உருவாக வேண்டும். புகழ்பெற்ற வேலூர் கோட்டை உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்கள் இன்றும் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை, தஞ்சை பெரிய கோவில் ஆகியவை எந்தவித சேதமின்றி நிற்கின்றன. அக்காலத்தில் கட்டிடக்கலையில் பயிற்சி பெற்றவர்கள் என்று யாரும் இல்லை. ஆனால் அவைகள் கட்டிடக்கலைக்கு உதாரணமாக இன்றும் விளங்குகின்றன.

நாட்டில் 8 முதல் 9 கோடி பேருக்கு வீடு இல்லை. அவர்களுக்குக் குடியிருப்பு உருவாக்கித்தர வேண்டும். வீடும் தேவை அதே நேரத்தில் உணவும் தேவை. எனவே விளை நிலங்கள் பாதிக்கப்படாமல் குடியிருப்புகள் அமைய வேண்டும். அதற்கு தேவையான புதிய கட்டிடக்கலை வடிவமைப்புத் தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஜி.விசுவநாதன் பேசினார்.

கருத்தரங்கில் சென்னை மிடாஸ் வடிவமைப்பு இயக்குனர் ஜாபர்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story