விலை அதிகமாக இருப்பதாக கூறி பயோ மெட்ரிக் கருவிகள் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைப்பு


விலை அதிகமாக இருப்பதாக கூறி பயோ மெட்ரிக் கருவிகள் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 4 Jan 2017 11:00 PM GMT (Updated: 4 Jan 2017 8:52 PM GMT)

விலை அதிகமாக இருப்பதாக கூறி பயோ மெட்ரிக் கருவிகள் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைப்பு

கரூர்,

விலை அதிகமாக இருப்பதாக கூறி பயோ மெட்ரிக் கருவிகளை இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஒப்படைத்தனர்.

ஒப்படைப்பு

கரூர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் பலர் நேற்று ஒன்றாக கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சீனிவாசன் மற்றும் துணை பதிவாளர் அபிராமி ஆகியோரிடம் தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள பயோ மெட்ரிக் கருவியின் விலை வெளிச்சந்தையை விட அதிகமாக இருக்கிறது. எனவே இந்த கருவியை தங்களிடம் ஒப்படைக்கிறோம் என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து சங்க செயலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் பயோ மெட்ரிக் கருவிகளை இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாநில கவுரவ பொது செயலாளர் குப்புசாமி கூறியதாவது:-

83 கருவிகள்

கரூர் மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் கரூர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பயோ மெட்ரிக் கருவி (விரல் ரேகை பதிவு செய்யும் கருவி) வழங்கப்பட்டு உள்ளது. இந்த கருவியின் விலை ரூ.3,400 என அந்தந்த கருவியின் அட்டை பெட்டியில் அச்சிடப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கருவியின் விலை ரூ.5,930 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையை அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த கருவி வெளிச்சந்தையில் ரூ.2,700-க்கு கிடைக்கிறது. வெளிச்சந்தையில் விற்கப்படும் விலையை விட கூட்டுறவு கடன் சங்கம் மூலம் அதிக விலைக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து கூட்டுறவு சங்க இணைப்பதிவாளருடன் கடந்த மாதம் 30-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் தீர்வு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து இன்று (நேற்று) கருவிகளை இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். மொத்தம் 83 கருவிகள் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்களுக்கு தேவையான வருமானம், சாதி, இருப்பிட சான்று ஆகியவை வழங்கும் போது சம்பந்தப்பட்ட ஊழியரின் விரல் ரேகையை இந்த கருவியில் பதிவு செய்தால்தான் அந்த கருவி தொடர்ந்து இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story