ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா 27–ந்தேதி தொடங்குகிறது முன்னேற்பாடுகள் குறித்து சப்–கலெக்டர் தலைமையில் ஆலோசனை


ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா 27–ந்தேதி தொடங்குகிறது முன்னேற்பாடுகள் குறித்து சப்–கலெக்டர் தலைமையில் ஆலோசனை
x
தினத்தந்தி 5 Jan 2017 10:45 PM GMT (Updated: 5 Jan 2017 5:00 PM GMT)

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா வருகிற 27–ந் தேதி தொடங்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பொள்ளாச்சி சப்–கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்

பொள்ளாச்சி,

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா வருகிற 27–ந் தேதி தொடங்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பொள்ளாச்சி சப்–கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. குண்டம் திருவிழா வருகிற 27–ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 14–ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி சப்– கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:–

குண்டம் திருவிழாவையொட்டி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும் வருகிற 27–ந்தேதி, அடுத்த மாதம் 11, 12–ந்தேதிகளில் ஒரு வழிப்பாதை ஏற்படுத்தி பஸ்களை பஸ் நிலையத்திலேயே நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

தடையில்லா மின்வினியோகம்

அடுத்த மாதம் 9–ந்தேதி இரவு மயான பூஜையன்று இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரையும், 11–ந்தேதி இரவு 7 மணி முதல் மறுநாள் பகல் 1 மணி வரை ஒரு தீயணைப்பு வாகனம் தேவையான தீயணைப்பு வீரர்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். 27–ந்தேதி குண்டம் திருவிழா கொடியேற்றத்தையொட்டி 26–ந்தேதி இரவு முதல் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.

இதேபோன்று குண்டம் பூ வளர்க்கும் 11–ந்தேதி இரவு முதல் பக்தர்கள் குண்டம் இறங்கும் 12–ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். 26–ந்தேதி முதல் அடுத்த மாதம் 14–ந்தேதி வரை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் தடையில்லா மின வினியோகம் செய்ய வேண்டும். பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும். சுகாதார வசதிகள், குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதிகள், கிருமி நாசினி தெளித்தல் மற்றும் குறிப்பாக கொசு மருந்து அடிக்க வேண்டும். கொடிமரம் செல்லும் பாதை, தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்துதல் வேண்டும்.

மருத்துவ குழு

இதேபோன்று மயான பூஜை நடைபெறும் சோமேஸ்வரர் கோவில் மற்றும் ஆற்றுப்பாதையில் இருந்து மயான பூஜை நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் சுத்தப்படுத்த வேண்டும். பக்தர்கள் குண்டம் இறங்கும் நாள் மற்றும் அதற்க முந்தைய நாட்களில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழு தயார் நிலையில் இருக்க வேண்டும். இதேபோன்று மயான பூஜை நடைபெறும் 9–ந்தேதி இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை 2 ஆம்புலன்சுடன் மருத்துவக்குழுவை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

மேற்கண்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திக், தாசில்தார் செல்வி, போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன், வட்டார போக்குவரத்து துறை அலுவலர் ஜெகநாதன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story