திருப்பூரில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய இலங்கை அகதி கைது ரூ.90 ஆயிரம், 7½ பவுன் நகை பறிமுதல்


திருப்பூரில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய இலங்கை அகதி கைது ரூ.90 ஆயிரம், 7½ பவுன் நகை பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jan 2017 10:45 PM GMT (Updated: 5 Jan 2017 5:11 PM GMT)

திருப்பூரில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய இலங்கை அகதியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.90 ஆயிரம், 7½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– திருட்டு திருப்பூர் அம்மாபாளையம் கஸ்தூரிபாய் வீதியை சேர்ந

அனுப்பர்பாளையம்,

திருப்பூரில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய இலங்கை அகதியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.90 ஆயிரம், 7½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

திருட்டு

திருப்பூர் அம்மாபாளையம் கஸ்தூரிபாய் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி கீதா(வயது 28). இவர் கடந்த 2–ந்தேதி காலை வீட்டை பூட்டி விட்டு தண்ணீர்பந்தல் காலனியில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

சிறிது நேரத்திற்கு பின்னர் கீதாவின் மாமனார் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம், தலா ½ பவுன் எடை கொண்ட 2 ஜோடி கம்மல் திருட்டு போயிருந்தது.

15 வேலம்பாளையம்

இதேபோல் திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த ஸ்ரீனிவாச லே–அவுட் ஏ.எஸ்.எம். காலனியை சேர்ந்த முரளி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.2 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் அனுப்பர்பாளையத்தை அடுத்த முத்துகோபால்நகரை சேர்ந்தவர் சகாயராஜ் (38) வீட்டு கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் சங்கிலி திருடப்பட்டு இருந்தது.

15 வேலம்பாளையம் தண்ணீர்பந்தல் காலனி வீரப்ப செட்டியார் தோட்டத்தை சேர்ந்தவர் அசோக பாண்டியன் (32). இவர் வீட்டை பூட்டி வீட்டு சாவியை வெளியே இருந்த அலமாரியில் வைத்து விட்டு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

வாகன சோதனை

இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக 15 வேலம்பாளையம் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் அவினாசி ரோடு அம்மாபாளையத்தில் உள்ள சோதனைசாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து போலீசார் அவரை அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இலங்கை அகதி கைது

விசாரணையில் அவருடைய பெயர் சுபாஷ் என்ற உதயகோபால ராஜா (35) என்பதும், அவினாசியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் குடும்பத்துடன் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவர் 3 நாட்களில் கீதா, ஜெயஸ்ரீ, சகாயராஜ் மற்றும் அசோக்பாண்டியன் ஆகியோருடைய வீடுகளில் நகை, பணத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து திருப்பூர் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

அவரிடம் இருந்து ரூ.90 ஆயிரம், 7½ பவுன் நகைகள் மற்றும் ஒரு மொபட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான சுபாஷ் மீது அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகளும், வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும், திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story