தூத்துக்குடி மாவட்டத்தில் கைவரிசை காட்டிய கார் திருடர்கள் 2 பேர் கைது 2 கார்கள், 1 ஆம்னி வேன், 2 மினி லாரிகள் பறிமுதல்


தூத்துக்குடி மாவட்டத்தில் கைவரிசை காட்டிய கார் திருடர்கள் 2 பேர் கைது 2 கார்கள், 1 ஆம்னி வேன், 2 மினி லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jan 2017 9:00 PM GMT (Updated: 5 Jan 2017 6:34 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் கைவரிசை காட்டிய கார் திருடர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், 1 ஆம்னி வேன், 2 மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகன சோதனை தூத்துக்குடி மாவட்டம் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் தலை

ஏரல்,

தூத்துக்குடி மாவட்டத்தில் கைவரிசை காட்டிய கார் திருடர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், 1 ஆம்னி வேன், 2 மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாகன சோதனை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் தலைமையில் போலீசார் ஏரல் காந்தி சிலை அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும், மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினர். அவர்களை விரட்டிச் சென்று போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தாளமுத்து நகர் பாரதி நகரைச் சேர்ந்த அண்ணாத்துரை மகன் ஜான்சன்(வயது 23), சவேரியார்புரம் திரேஸ் நகர் 2–வது தெருவை சேர்ந்த ஜார்ஜ் சைமன் மகன் சார்லஸ் பென்சர்(26) என்பது தெரிய வந்தது.

கைது–வாக்குமூலம்

இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் கார்கள், லோடு ஆட்டோக்களை திருடியதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான ஜான்சன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:–

குறுக்குவழியில் சம்பாதிக்க...

நான் பத்தாம் வகுப்பு வரை படித்து உள்ளேன். பின்னர் கார் பழுது பார்க்கும் கடை, வாகனங்கள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை போன்றவற்றில் சில ஆண்டுகள் வேலை செய்தேன். பின்னர் சென்னையில் லோடு ஆட்டோவில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்தேன். கடந்த 6 மாதமாக எனது வீட்டில் கார்களை பழுது பார்க்கும் வேலை செய்து வந்தேன்.

பெண்களுடன் உல்லாசம்

கார்களை பழுது பார்ப்பதற்காக அதன் உரிமையாளர்கள் தரும் முன்பணத்தை ஆடம்பரமாக செலவு செய்தேன். பல பெண்களுடனும் உல்லாசமாக இருந்தேன். குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆசைப்பட்டேன். என்னுடைய பெரியம்மா மகன் சார்லஸ் பென்சர், சவேரியார்புரம் மெயின் ரோட்டில் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்தார். அவரிடம் எனது ஆசையை தெரிவித்தேன்.

இதனைத்தொடர்ந்து நாங்கள் இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் கார்கள், லோடு ஆட்டோக்களை திருடி விற்க திட்டமிட்டோம்.

பல்வேறு இடங்களில் கைவரிசை

அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 1–ந் தேதி இரவில் தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு கே.டி.சி. நகரில் சாமி பெட்ரோல் பல்க் பின்புறம் உள்ள தெருவில் நின்ற ஒரு காரை திருடினோம். பின்னர் ஒரு வாரம் கழித்து ஏரல் வாழவல்லான் பஸ் நிறுத்தம் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு லோடு ஆட்டோவை திருடினோம்.

அதன் பிறகு 4 நாட்கள் கழித்து கோவில்பட்டி–மதுரை புறவழிச்சாலையில் ஒரு கடையின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு காரை திருடிச் சென்றோம். கடந்த மாதம் 28–ந் தேதி குரும்பூர் சி.எஸ்.ஐ. சர்ச் அருகில் நின்ற ஒரு காரையும், கடந்த 3–ந் தேதி ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு லோடு ஆட்டோவையும் திருடினோம்.

கடந்த 4–ந் தேதி காலையில் ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு, அங்குள்ள ஓட்டலில் சாப்பிட சென்றோம். அப்போது அங்கு பிரியாணி இல்லாததால் 2 நாற்காலிகளை அரிவாளால் வெட்டி விட்டு ஓட்டல் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றோம். இந்த நிலையில் போலீசாரிடம் சிக்கி கொண்டோம்.

இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

வாகனங்கள் பறிமுதல்

கைதான ஜான்சன், சார்லஸ் பென்சர் ஆகியோரிடம் இருந்து 2 கார்கள், 1 ஆம்னி வேன், 2 மினி லாரிகள், ஒரு மோட்டார் சைக்கிள், அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.


Next Story