முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூ.1 கோடி கடனுதவி கலெக்டர் ரவிகுமார் தகவல்


முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூ.1 கோடி கடனுதவி கலெக்டர் ரவிகுமார் தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2017 8:00 PM GMT (Updated: 5 Jan 2017 6:42 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில், முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூ.1 கோடி வரை கடன் வழங்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது;– முதல் தலைமுறை படித்த இளைஞர்களுக்கு தொழில் ம

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில், முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூ.1 கோடி வரை கடன் வழங்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது;–

முதல் தலைமுறை

படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சியளித்து, அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டத்தை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது.

மானியம்

இந்த திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சியை, கல்வி தகுதியாக பெற்றிருப்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்யப்படுகிறது. அதன் பின்னர் வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம், தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கி மூலம் கடன் பெற்று தரப்படுகிறது. இந்த திட்ட முதலீட்டில் 25 சதவீதம் முதலீட்டு மானியமாகவும், செலுத்திய வட்டியில் 3 சதவீதம் வட்டி மானியமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.1 கோடி கடன் உதவி

இந்த திட்டத்தின் கீழ், கடன் உதவி கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவினருக்கு வயது 21–க்கு மேல், 35–க்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினரான மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். இந்த திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்திற்கு மேல், அதிகபட்சம் ரூ.1 கோடி வரையிலான உற்பத்தி சார்ந்த தொழில்கள், சேவை சார்ந்த தொழில்கள் தொடங்கலாம்.

தேர்வுக்குழு...

பொது பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் தங்கள் பங்காக முதலீடு செய்ய வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும். இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு தொழிலின் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை முதலீட்டு மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற தகுதியானவர்களை மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவினர் தேர்வு செய்வார்கள். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு ஒரு மாதம் கட்டாய மேலாண்மை பயிற்சி வழங்கப்படும்.

தொழில் மையத்தில் பதிவு

நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி காயல்பட்டினம் நகரசபைகள் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பஞ்சாயத்து யூனியன்களில் இருந்து மொத்தம் 30 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு பிரதமரின் ஸ்டேன்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்படும். மேலும் அந்த திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்பும் பயனாளிகள் உடனடியாக திட்ட அறிக்கை, விலைப்புள்ளி மற்றும் ஆதார்கார்டு விவரங்களுடன் தூத்துக்குடி மாவட்டத் தொழில் மைய அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்க இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து, விண்ணப்பத்தை 2 நகல்கள் எடுத்து ஆவணங்களை இணைத்து, ‘தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்துக்கு’ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461–2340152, 2340053 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம், என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story