வாசுதேவநல்லூரில் 3 நாட்களாக நடைபெற்ற கரும்பு விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு


வாசுதேவநல்லூரில் 3 நாட்களாக நடைபெற்ற கரும்பு விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 5 Jan 2017 9:00 PM GMT (Updated: 5 Jan 2017 7:00 PM GMT)

வாசுதேவநல்லூரில் நேற்று 3–வது நாளாக நடைபெற்ற கரும்பு விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் போராட்டம் வாசுதேவநல்லூர் தனியார் கரும்பு ஆலையின் முன்பு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் காத்திரு

வாசுதேவநல்லூர்,

வாசுதேவநல்லூரில் நேற்று 3–வது நாளாக நடைபெற்ற கரும்பு விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகள் போராட்டம்

வாசுதேவநல்லூர் தனியார் கரும்பு ஆலையின் முன்பு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக கரும்புக்கு மாநில அரசு அறிவித்த விலையை தனியார் ஆலைகள் வழங்காமல் பாக்கி வைத்துள்ளன. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக தனியார் ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு பணத்தை பட்டுவாடா செய்ய வேண்டும்.

கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3–வது நாளாக...

கடந்த 2 நாட்களாக பகல், இரவில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு வந்தனர். இந்த போராட்டம் நேற்று 3–வது நாளாக நீடித்தது.

ஆலை வட்ட தலைவர் ரத்தினவேலு, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், தமிழ்நாடு பெண்கள் சங்க இணைப்பு குழு பொறுப்பாளர் பொன்னுத்தாய், மாவட்ட விவசாய சங்க தொழிலாளர் செல்லத்துரை, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பழனிச்சாமி, மாவட்ட தலைவர் வேலுமயில், வாசுதேவநல்லூர் கோட்ட கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குலாம் முகம்மது உள்பட திரளானோர் நேற்றைய போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஒத்திவைப்பு

இதற்கிடையே சென்னையில் நேற்று பகல் 11 மணி அளவில் அமைச்சர் சம்பத் முன்னிலையில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வருகிற 9–ந் தேதி தமிழ்நாட்டில் உள்ள கரும்பு ஆலை உரிமையாளர்களிடம், அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சினையில் சுமுக முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தகவல் வாசுதேவநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த கரும்பு விவசாயிகளிடம் மதியம் 2 மணிக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்துவிட்டு, கலைந்து சென்றனர்.


Next Story