உள்ளாடை பண்டல் காணாமல் போன வழக்கில் ரூ.2 லட்சத்து 93 ஆயிரம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


உள்ளாடை பண்டல் காணாமல் போன வழக்கில் ரூ.2 லட்சத்து 93 ஆயிரம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Jan 2017 10:15 PM GMT (Updated: 5 Jan 2017 8:41 PM GMT)

உள்ளாடை பண்டல் காணாமல் போன வழக்கில் ரூ.2 லட்சத்து 93 ஆயிரம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

திருச்சி,

உள்ளாடை பண்டல் காணாமல் போன வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2 லட்சத்து 93 ஆயிரம் வழங்க திருச்சி நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஜவுளி பண்டல் மாயம்

திருச்சி நந்திகோவில் தெருவை சேர்ந்தவர் அனில்குமார். ஜவுளி வியாபாரி. இவர் ஈரோட்டை சேர்ந்த ஒரு ஜவுளி நிறுவனத்தில் ஜவுளிகள் வாங்கி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 31-10-2014 அன்று ஈரோடு ஜவுளி நிறுவனம் திருச்சியை சேர்ந்த வியாபாரி அனில் குமாருக்கு ரூ.2 லட்சத்து 93 ஆயிரத்து 14 மதிப்புள்ள பெண்கள் அணியும் உள்ளாடை துணியை 10 பண்டல்களில் ஈரோட்டில் உள்ள ஒரு சரக்கு ஏற்றி செல்லும் நிறுவனத்தின் மூலம் உரிய சரக்கு கட்டணத்தை செலுத்தி அனுப்பி வைத்தது. ஆனால் அந்த துணி பண்டல்கள் திருச்சிக்கு வந்து சேரவில்லை.

இதனை தொடர்ந்து ஜவுளி வியாபாரி அனில் குமார் திருச்சியில் உள்ள சரக்கு நிறுவனத்தை அணுகினார். அப்போது ஜவுளி பண்டல்கள் காணாமல் போய்விட்டதாகவும், அதற்குரிய தொகையை தந்து விடுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் அந்த தொகையை சரக்கு போக்குவரத்து நிறுவனம் வழங்கவில்லை.

தொகையை வழங்க உத்தரவு

இதனை தொடர்ந்து அனில் குமார் திருச்சி உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு மூலம் திருச்சி நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி செங்கோட்டையன் விசாரித்தார். அப்போது சேவை குறைபாடு காரணமாக குற்றம் சுமத்தப்பட்ட சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் சார்பில் யாரும் ஆஜர் ஆகவில்லை. இதனை தொடர்ந்து ‘எக்ஸ் பார்ட்டி’ ஆக தீர்ப்பு கூறப்பட்டது. சரக்கு போக்குவரத்து நிறுவனத்தினர் பாதிக்கப்பட்ட அனில் குமாருக்கு ஒரு மாத காலத்திற்குள் ரூ.2 லட்சத்து 93 ஆயிரத்து 14 ஐ வழங்க வேண்டும் என நீதிபதி செங்கோட்டையன் தீர்ப்பு அளித்தார்.

Next Story