புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 லட்சத்து 63 ஆயிரத்து 359 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கலெக்டர் கணேஷ் தகவல்


புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 லட்சத்து 63 ஆயிரத்து 359 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கலெக்டர் கணேஷ் தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2017 10:45 PM GMT (Updated: 5 Jan 2017 8:42 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 லட்சத்து 63 ஆயிரத்து 359 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கலெக்டர் கணேஷ் தகவல்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 லட்சத்து 63 ஆயிரத்து 359 வாக்காளர்கள் உள்ளனர் என இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கலெக்டர் கணேஷ் தெரிவித்தார்.

இறுதி வாக்காளர் பட்டியல்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு சுருக்கத்திருத்தம் 2017-ஐ முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 1-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2017 செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் உரிய வரைவு வாக்காளர் பட்டியல்கள் கடந்த 1.9.2016-ந் தேதி வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 1.9.2016-ந் தேதி முதல் 30.9.2016-ந் தேதி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து தாசில்தார் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் தகுதியுடைய நபர்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மற்றும் இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன

இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுதியுடைய விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இன்று (நேற்று வியாழக்கிழமை) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

6 தொகுதி வாக்காளர்கள்

இதன்படி கந்தர்வக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதியில் 96 ஆயிரத்து 720 ஆண் வாக்காளர்கள், 94 ஆயிரத்து 930 பெண் வாக்காளர்கள், 10 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 660 வாக்காளர்கள் உள்ளனர். இதே போன்று விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 493 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 3 ஆயிரத்து 913 பெண் வாக்காளர்கள், 3 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 409 வாக்காளர்கள் உள்ளனர். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 10 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 248 பெண் வாக்காளர்கள், 8 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 266 வாக்காளர்கள் உள்ளனர்.

திருமயம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 743 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 8 ஆயிரத்து 904 பெண் வாக்காளர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 648 வாக்காளர்கள் உள்ளனர். ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 230 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து ஆயிரத்து 830 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 60 வாக்காளர்கள் உள்ளனர். அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 364 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 9 ஆயிரத்து 951 பெண் வாக்காளர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 316 வாக்காளர்கள் உள்ளனர்.

புதிய வாக்காளர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 6 லட்சத்து 26 ஆயிரத்து 560 ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 36 ஆயிரத்து 776 பெண் வாக்காளர்கள், 23 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 12 லட்சத்து 63 ஆயிரத்து 359 வாக்காளர்கள் உள்ளனர். இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் 34 ஆயிரத்து 664 பேர் உள்ளனர். இதில் 18 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் 11 ஆயிரத்து 124 பேர் ஆவார்கள். புதிதாக சேர்க்கப்பட்டு உள்ள வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தேசிய வாக்காளர் தினமான வருகிற 25-ந் தேதியன்று அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, புதுக்கோட்டை உதவி கலெக்டர் அம்ரித், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் வடிவேல்பிரபு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story