அரியலூர் மாவட்டத்தில் பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் 2 விவசாயிகள் சாவு


அரியலூர் மாவட்டத்தில் பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் 2 விவசாயிகள் சாவு
x
தினத்தந்தி 5 Jan 2017 10:45 PM GMT (Updated: 5 Jan 2017 8:43 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் 2 விவசாயிகள் சாவு

தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்டத்தில் பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் 2 விவசாயிகள் பரிதாபமாக இறந்தனர்.

விவசாயிகள் சாவு

அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோயில் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 65). விவசாயி. இவர் தனது வயலில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். மழை பொய்த்து போனதால் தண்ணீரின்றி அவரது வயலில் உள்ள மக்காச்சோள பயிர்கள் கருகிவிட்டன. நேற்று வயலுக்கு சென்ற கலியபெருமாள் பயிர்கள் கருகி இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் வயலிலேயே மயங்கி விழுந்து கிடந்தார். பக்கத்து வயலில் இருந்தவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதேபோல் ஆண்டிமடம் அருகே உள்ள ஓலையூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (58). விவசாயி. இவர் தனது வயலில் உளுந்து பயிரிட்டுள்ளார். மழை பெய்யாததால் தண்ணீரின்றி அவரது வயலில் உளுந்து பயிர்கள் கருகிவிட்டன. நேற்று முன்தினம் சக்கரவர்த்தி தனது வயலில் உள்ள கருகிப்போன பயிர்களை பார்த்து மனமுடைந்தார். மேலும் விவசாய கடனை திருப்பி செலுத்த வழி இல்லாததாலும் அவர் சோகத்துடன் இருந்தார். அப்போது திடீரென வயலிலேயே சக்கரவர்த்தி மயங்கி விழுந்தார். பக்கத்து வயலை சேர்ந்தவர்கள் சக்கரவர்த்தியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இழப்பீடு

வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் அரியலூர் மாவட்டத்தில் பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால் மாவட்டத்தில் வறட்சியால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி, விவசாயிகளின் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


Next Story