8-ந் தேதி வரை நடக்கிறது தமிழ்நாடு அஞ்சல் துறை கண்காட்சி தொடங்கியது பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வம்


8-ந் தேதி வரை நடக்கிறது தமிழ்நாடு அஞ்சல் துறை கண்காட்சி தொடங்கியது பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 5 Jan 2017 9:16 PM GMT (Updated: 5 Jan 2017 9:16 PM GMT)

தமிழ்நாடு அஞ்சல் துறை சார்பில் தபால்தலை கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது. பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

சென்னை,

தமிழ்நாடு அஞ்சல் துறை சார்பில் தபால்தலை கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது. பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

தபால்தலை கண்காட்சி

தமிழ்நாடு அஞ்சல் துறையின் 11-வது தபால்தலை கண்காட்சி தொடக்க விழா சென்னை செனாய்நகரில் உள்ள மாநகராட்சி அம்மா அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக தபால் துறை தலைவர் டி.மூர்த்தி கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு கைவிணை-கைத்தறி துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தமிழக பாரம்பரிய பட்டு சேலைகள், திருவாரூர் கோவில் தேர், இந்திய மஞ்சள் வகைகள், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சாமி ஆகியவற்றின் சிறப்பு அஞ்சல் உறைகளையும், முட்டம், மணப்பாடு கலங்கரை விளக்கம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆகியவற்றின் அஞ்சல் முத்திரையையும் வெளியிட்டார்.

‘தினத்தந்தி’ சிறப்பு தபால் உறை

தபால்தலை கண்காட்சியில் 450 காட்சி பலகைகள் இடம் பெற்றுள்ளன. இதில், தபால் துறை தொடங்கிய காலம் முதல் தற்போது வரை உள்ள அஞ்சல் தலைகள், தபால் உறைகள், மணியார்டர் விண்ணப்ப படிவங்கள், கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், காந்தி, நேரு போன்ற பிரபல தலைவர்கள் எழுதிய கடிதங்கள் வைக்கப்பட்டுள்ளன.

உலக அதிசயங்கள், விலங்குகள், பறவைகள், போன்ற உருவங்களுடன் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலைகள் பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருந்த தபால்தலைகளும் கண்காட்சியை அலங்கரித்துள்ளன.

1992-ம் ஆண்டு ‘தினத்தந்தி’ பொன் விழாவையொட்டி, ‘தினத்தந்தி’ நிறுவனர் சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துடன் வெளியான சிறப்பு தபால் உறையும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

கண்காட்சியை பள்ளி மாணவ-மாணவிகள், தபால் தலை சேகரிப்பாளர்கள் நேற்று ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர். நேற்று தொடங்கிய கண்காட்சி 8-ந் தேதி வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம். 15 அரங்குகளில் தபால்துறை சம்பந்தமான பொருட்கள் விற்பனையும் நடக்கிறது. 

Next Story