சேலத்தில் துணிகரம்: கல்மாவு மில் உரிமையாளர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை


சேலத்தில் துணிகரம்: கல்மாவு மில் உரிமையாளர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 3 Feb 2017 11:15 PM GMT (Updated: 3 Feb 2017 2:18 PM GMT)

சேலம் நெத்திமேட்டில் கல்மாவு மில் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் 22 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

சேலம்,

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

கல்மாவு மில் உரிமையாளர்

சேலம் நெத்திமேடு தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில் அருகே உள்ள எஸ்.கே.கார்டன் பகுதியில் வசித்து வருபவர் வெற்றிவேல்(வயது42). இவர் கரியபெருமாள் கரடு பகுதியில் கல்மாவு அரைக்கும் மில் நடத்தி வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு 10 வயதில் யாதவ் என்ற மகன் இருக்கிறான்.

செங்கல்பட்டுவில் வெற்றிவேலின் உறவினர் வீட்டு திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த 1–ந் தேதி வெற்றிவேல் தனது மனைவி, மகன் ஆகியோருடன் வீட்டை பூட்டி விட்டு செங்கல்பட்டுக்கு புறப்பட்டு சென்றனர். திருமண விழாவில் பங்கேற்று விட்டு நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வெற்றிவேல் தனது குடும்பத்தினருடன் மீண்டும் சேலம் எஸ்.கே.கார்டனில் உள்ள வீட்டிற்கு வந்தனர்.

வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை

வீட்டின் மெயின் கிரீல் கேட் பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. அந்த கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றால், அங்கு வீட்டின் மரக்கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்திருப்பதை கண்டு வெற்றிவேலும், அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் வீட்டின் படுக்கை அறையில் உள்ள பொருட்கள் சிதறிகிடந்தது. அங்கிருந்த பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 22 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. வெள்ளி பொருட்களும் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். வெற்றிவேல் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை கண்காணித்த மர்ம ஆசாமிகள், இரவு வேளையில், வீட்டின் சுற்றுச்சுவர் வழியாக ஏறிக்குதித்து உள்ளே புகுந்து கதவின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இந்த கொள்ளை சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசில் வெற்றிவேல் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்–இன்ஸ்பெக்டர்கள் மாதேஷ், ரவிக்குமார் மற்றும் போலீசார், கொள்ளை நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சி.சி. டி.வி. கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பழைய கொள்ளையர்களின் கைரேகையுடன் தற்போது பதிவாகி உள்ள கைரேகை ஒத்துப்போகிறதா? எனவும் போலீசார் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story