ரதசப்தமி விழாவையொட்டி 7 வாகனங்களில் மலையப்பசாமி வீதிஉலா


ரதசப்தமி விழாவையொட்டி 7 வாகனங்களில் மலையப்பசாமி வீதிஉலா
x
தினத்தந்தி 3 Feb 2017 9:00 PM GMT (Updated: 3 Feb 2017 2:19 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா நேற்று நடைபெற்றது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தங்க, வைர ஆபரணங்களை அணிந்து, பட்டு வஸ்திரங்களுடன் அலங்கரிக்கப்பட்ட 7 வாகனங்களில் பவனி வந்தார்.

ரதசப்தமி விழா

சூரியபகவான் தெற்கு பகுதியிலிருந்து வடக்கு நோக்கி தனது பயணத்தை தொடங்கினார். 7 குதிரைகள் பூட்டிய வாகனத்தில் தை மாதம் வளர்பிறை 7–ம் நாளான சப்தமி திதியிலிருந்துதான் அவரது பயணம் வேகம்பெறுகிறது. இந்த நாள் ரதசப்தமி எனப்படுகிறது. இதனையொட்டி திருப்பதி ஏழுமலையான்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ரதசப்தமி விழா கொண்டாடப்படும். இந்த விழாவில் உற்சவரான மலையப்பசாமி காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அதன்படி நேற்று ரதசப்தமி விழா நடந்தது. இதனையொட்டி கோவில் முழுவதும் 2 டன் மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நேற்று அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9 மணிவரை ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் மலையப்பசாமி மாடவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முதல் சேவையாக காலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசாமி மாட வீதியில் பவனி வந்தார். பிறகு 9 மணிக்கு சின்ன சே‌ஷ வாகனத்தில் புறப்பட்டு 10 மணி வரை வலம்வந்தார்.

அதைத்தொடர்ந்து 11 மணிக்கு கருட வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்தார். பின்னர் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும், 2 மணி முதல் 3 மணிவரை கல்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இதை தொடர்ந்து சக்கரத்தாழ்வார் மாடவீதிகளில் பவனி வந்தார். அவர் கோவில் அருகே உள்ள புஷ்கரணிக்கு வந்ததும் அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதனை தொடர்ந்து சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி சக்கர ஸ்நானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் பக்தர்களும் புஷ்கரணியில் நீராடினர். இதனை தொடர்ந்து சக்கரத்தாழ்வார் கோவிலுக்கு திரும்பினார்.

மாலையில், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், இரவு மணிக்கு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

மலையப்பசாமி 7 வாகனங்களில் எழுந்தருளிய அற்புத காட்சியை தரிசிக்க பல்லாயிரக்காண பக்தர்கள் திருப்பதி 4 மாடவீதிகளிலும் உள்ள காலரியில் அமர்ந்து பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை தேவஸ்தானம் செய்திருந்தது. மேலும் பக்தர்களுக்கு புளிசாதம், தயிர்சாதம், சாம்பார் சாதம், பொங்கல் உள்ளிட்ட அன்னபிரசாதம் மற்றும் தண்ணீர், பால், மோர் வழங்கப்பட்டது.

திருமலை துணை அதிகாரி சீனிவாசராஜு, அறங்காவல்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் ஆகியோர் திருவிழா பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story