திருவண்ணாமலையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2017 9:00 PM GMT (Updated: 3 Feb 2017 2:43 PM GMT)

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுழைவு வாயில் முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கவுரவ விரிவுரையாளர்கள் நல சங்க மாவட்ட தலைவர் அனந்தராமன் தலைமை தாங்கினார். செயலாளர் நிமலன், பொருளாளர் ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தகவல் தொடர்பாளர்கள் ஜீவா, தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

சிறை நிரப்பும் போராட்டம்

பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்தப்படி அரசு கலைக்கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும், கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அண்ணாமலை பல்கலைக்கழகம் பணி நியமன ஆணை வழங்கிய ஆசிரியர்களை அரசு கலைக்கல்லூரிகளில் நியமிக்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (நேற்று) முதல் தொடர்ந்து 3 நாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கவுரவ விரிவுரையாளர்கள் கூறினார்கள்.

இதில் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.Next Story