நெல்லிக்குப்பம் செல்லியம்மன்கோவில் கும்பாபிஷேக விழாவில் 4 பெண்களிடம் 12 பவுன் நகை பறிப்பு


நெல்லிக்குப்பம் செல்லியம்மன்கோவில் கும்பாபிஷேக விழாவில் 4 பெண்களிடம் 12 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 3 Feb 2017 10:45 PM GMT (Updated: 3 Feb 2017 2:44 PM GMT)

நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் 4 பெண்களிடம் 12 பவுன் நகையை பறித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம்,

கும்பாபிஷேக விழா

நெல்லிக்குப்பத்தில் வான்பாக்கம் சாலையில் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த செல்லியம்மன் கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோவிலில் கடந்த 300 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெறாமல் இருந்தது. எனவே கோவிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றது. பல வர்ணங்கள் பூசப்பட்டு தற்போது கோவில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

இதனை தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, நேற்று காலையில் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

4 பெண்களிடம் நகை பறிப்பு

இந்த விழாவை காணவந்த நெல்லிக்குப்பம் காந்திநகரை சேர்ந்த கலியபெருமாள் மனைவி சுந்தரி(வயது 60), குப்புசாமி மனைவி லட்சுமிகாந்தம்(62), கயிலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரம் மனைவி தனம்(60), விருத்தாசலத்தை சேர்ந்த சற்குணம் மனைவி தனலட்சுமி(58) ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த நகையை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த 4 பேரும் தனித்தனியாக நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கும்பாபிஷேக விழாவில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுந்தரி அணிந்திருந்த 2 பவுன் நகையையும், லட்சுமிகாந்தம் அணிந்திருந்த 3 பவுன் நகையையும், தனம் அணிந்திருந்த 4 பவுன் நகையையும், தனலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் நகையையும் மர்மநபர்கள் பறித்துச்சென்றிருப்பது தெரியவந்துள்ளது. கும்பாபிஷேக விழாவில் பெண்களை குறிவைத்து கைவரிசை காட்டிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story