வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் கணவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் டி.ஐ.ஜி.யிடம் இளம்பெண் புகார்


வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் கணவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் டி.ஐ.ஜி.யிடம் இளம்பெண் புகார்
x
தினத்தந்தி 3 Feb 2017 10:30 PM GMT (Updated: 3 Feb 2017 4:48 PM GMT)

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வன்னாங்காடு முருகப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்.

சேலம்,

இவரது மகள் நிர்மலா (வயது 24). இவர், நேற்று தனது 3 வயது பெண் குழந்தையுடன் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு வந்தார். பின்னர், அவர் டி.ஐ.ஜி. நாகராஜனை சந்தித்து ஒரு புகார் மனுவை கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர் ஒருவருடன் எனக்கு திருமணம் நடந்தது. தற்போது தர்ஷினி (3) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு மாதமாக எனது கணவர் திடீரென வீட்டிற்கு வரவில்லை. இதுபற்றி விசாரித்தபோது, வேறொரு பெண்ணுடன் எனது கணவர் குடும்பம் நடத்தி வருவதாக உறவினர்கள் மூலம் எனக்கு தெரியவந்தது. இது தொடர்பாக மாமனார், மாமியாரிடம் கேட்டால், என்னையும், குழந்தையையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள். இதுகுறித்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் அவர்கள் புகார் மனுவை ஏற்காமல் அலைக்கழிப்பு செய்து வருகின்றனர். தற்போது உயிருக்கு பயந்து என் பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றேன். வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் கணவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். மேலும், எனது கணவரை மறைத்து வைத்திருக்கும் அந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நிர்மலாவின் மனு மீது போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story