நாகர்கோவிலில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசம்


நாகர்கோவிலில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 3 Feb 2017 9:15 PM GMT (Updated: 3 Feb 2017 6:47 PM GMT)

நாகர்கோவிலில் நள்ளிரவில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் நள்ளிரவில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

மோட்டார் சைக்கிள்களில் திடீர் தீ

நாகர்கோவில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 70). இவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு வசித்து வருபவர் அற்புதசுந்தர் (42). இவர் ஆண்டாள்புரம் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் 2 பேரும் தங்களது மோட்டார் சைக்கிளை வீட்டின் காம்பவுண்டுக்குள் நிறுத்திவிட்டு இரவில் தூங்கச் செல்வது வழக்கம். அது போல் நேற்று முன்தினம் இரவும் காம்பவுண்டுக்குள் 2 மோட்டார் சைக்கிள்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நள்ளிரவில் 2 மோட்டார் சைக்கிள்களும் திடீரென தீப்பிடித்து எரிந்தன. சத்தம் கேட்டு நாராயணனும், அற்புதசுந்தரும் எழுந்து ஓடி வந்து பார்த்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்கள் கொழுந்து விட்டு எரிவதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க அவர்கள் போராடினார்கள்.

போலீஸ் விசாரணை

இதற்கிடையே இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் 2 மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து நாசமானது. மேலும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு சைக்கிளும் சேதம் அடைந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டார் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருந்த இடத்துக்கு அருகில் மின்சார மீட்டர் பெட்டி இருந்ததாகவும், அதில் உள்ள மின் வயர் மூலம் மின் கசிவு ஏற்பட்டு மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், நாராயணன் மற்றும் அற்புதசுந்தர் ஆகியோர் மீது முன்விரோதம் கொண்ட யாரேனும் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story