தென்காசியில் முகத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்த முதியவர் மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை


தென்காசியில் முகத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்த முதியவர் மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 Feb 2017 7:45 PM GMT (Updated: 3 Feb 2017 7:06 PM GMT)

தென்காசியில் முகத்தில் காயங்களுடன் முதியவர் பிணமாக கிடந்தார். அவரது மர்மச் சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி,

தென்காசியில் முகத்தில் காயங்களுடன் முதியவர் பிணமாக கிடந்தார். அவரது மர்மச் சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காயங்களுடன் கிடந்த முதியவர்


தென்காசி வாய்க்கால் பாலத்தின் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் முதியவர் ஒருவர், முகத்தில் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பார்வையிட்டனர். அவரது முகத்தில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. முதலில் அவர் யார், எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பாளையங்கோட்டை புகழ் சோலை நாராயணர் தெருவை சேர்ந்த முருகன் (வயது 76) என்பது தெரியவந்தது. பல ஆண்டுகளாக தென்காசியிலேயே அவர் வசித்து வந்ததும், தென்காசியில் உள்ள ஒரு டீக்கடையின் முன்பு தான் இரவில் படுத்து உறங்கி வந்ததும் தெரியவந்தது. அவர் தனது குடும்பத்தை விட்டு ஏன் பிரிந்து தென்காசிக்கு வந்தார்? என்ற காரணம் தெரியவில்லை.

மர்மச்சாவு


அவர் தடுமாறி விழுந்து அதனால் முகத்தில் காயம் ஏற்பட்டு இறந்தாரா? அல்லது அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்தார்களா என்ற கோணங்களில் அவரது மர்மச் சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story