மின்சாதனங்கள் பழுதுபார்க்கும் கடையில் ஏ.சி. எந்திரம் வெடித்து 3 பேர் படுகாயம்


மின்சாதனங்கள் பழுதுபார்க்கும் கடையில் ஏ.சி. எந்திரம் வெடித்து 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 3 Feb 2017 10:00 PM GMT (Updated: 3 Feb 2017 7:10 PM GMT)

தேனியில் மின்சாதனங்கள் பழுதுபார்க்கும் கடையில், ஏ.சி.எந்திரம் வெடித்து 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏ.சி.எந்திரம் வெடித்தது

தேனி என்.ஆர்.டி. நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் என்.ஆர்.டி. நகரில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே மின்சாதனங்கள் பழுதுபார்க்கும் கடை வைத்து உள்ளார். இந்த கடையில் அல்லிநகரத்தை சேர்ந்த முத்துமாணிக்கம் மகன் சதீஸ்பாண்டி (வயது 25), தேவாரம் வடக்கு தெருவை சேர்ந்த மொக்கையா மகன் நாகராஜ் (26), மதுரையை சேர்ந்த சங்கர் மகன் வீரா (26) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று இவர்கள் வழக்கம் போல் கடையில் பழுதுபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். பிற்பகல் 3½ மணியளவில் ஒரு ஏ.சி.எந்திரத்தை பழுதுபார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

3 பேர் படுகாயம்

வெடிகுண்டு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அங்கு சதீஸ்பாண்டி, நாகராஜ், வீரா ஆகிய 3 பேரும் படுகாயங்களுடன் கிடந்தனர். சதீஸ்பாண்டியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்ற இருவருக்கும் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அவர்களின் முகம், உடல் அனைத்தும் கரும்புகை பட்டு, கருப்பாக காட்சி அளித்தது. கடையில் இருந்த சில பொருட்களும் சேதம் அடைந்தன.

தகவல் அறிந்ததும் தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்திற்கு தேனி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story