நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 3 Feb 2017 8:30 PM GMT (Updated: 3 Feb 2017 7:21 PM GMT)

நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை,

நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தைப்பூச திருவிழா

நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 31–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜையும் நடந்து வருகிறது.

நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி

4–ம் திருநாளான நேற்று திருநெல்வேலி என்ற பெயர் வர காரணமாக இருந்த, நெல்லுக்கு வேலியிட்டு இறைவன் நடத்திய திருவிளையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்பவர் சுவாமிக்கு அமுது படைப்பதற்காக, யாசகமாக பெற்ற நெல்லை காய வைத்து விட்டு நீராட சென்றார். அப்போது கனமழை பெய்தது. இதை கண்டு பதறிப்போன வேத பட்டர், சுவாமிக்கு காய வைத்த நெல் நனைந்து விடுமே என ஓடி வந்தார். ஆனால் நெல் காய வைத்த இடம் மட்டும் நனையாமல் சுற்றி மழை பெய்தது.

இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் நெல்லையப்பர் கோவிலில் நேற்று பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி நடந்தது. நெல்லை காய வைப்பது போன்றும், வேதபட்டர் ஓடி வருவதும், காய வைக்கப்பட்ட நெல் நனையாமல் சுற்றியுள்ள பகுதியில் மழை பெய்தது போன்ற நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தீர்த்தவாரி

வருகிற 9–ந் தேதி (வியாழக்கிழமை) பகல் 12.30 மணி அளவில் தைப்பூச தீர்த்தவாரி விழா, நெல்லை கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றில் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு அகத்தியர், தாமிரபரணி அன்னை, குங்குலிய கலய நாயனார், சண்டிகேசுவரர், அஸ்திர தேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் நெல்லையப்பர் கோவிலில் இருந்து எழுந்தருளுகிறார்கள். நெல்லையப்பர் கோவில் நெடுஞ்சாலை வழியாக சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்துக்கு வருகிறார்கள். தீர்த்தவாரி முடிந்ததும், அன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு நெல்லையப்பர் கோவிலுக்கு வந்து சேர்கிறார்கள்.

தெப்பத்திருவிழா

10–ந் தேதி (வெள்ளிக்கிழமை) சவுந்திர சபை மண்டபத்தில் நடராஜர் திரு நடனக்காட்சியும், 11–ந் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பத்தில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story