குசால்நகர் அருகே கடத்தப்பட்ட அரசு பஸ் 3 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு


குசால்நகர் அருகே கடத்தப்பட்ட அரசு பஸ் 3 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Feb 2017 9:15 PM GMT (Updated: 3 Feb 2017 7:35 PM GMT)

குசால்நகர் அருகே கடத்தப்பட்ட அரசு பஸ்சை போலீசார் 3 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்பு மீட்டுள்ளனர். மேலும் பஸ்சை கடத்தி சென்ற மர்மநபரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

குடகு,

குசால்நகர் அருகே கடத்தப்பட்ட அரசு பஸ்சை போலீசார் 3 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்பு மீட்டுள்ளனர். மேலும் பஸ்சை கடத்தி சென்ற மர்மநபரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள....


குடகு மாவட்டம் மடிகேரியில் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனைக்கு உட்பட்ட அரசு (கே.எஸ்.ஆர்.டி.சி.) பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருபவர் கோபால கிருஷ்ணன். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மைசூருவில் நடக்க இருந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக மடிகேரியை சேர்ந்த அரசியல் கட்சியினர், மடிகேரியில் உள்ள போக்குவரத்து கழக பணிமனையில் ஒரு பஸ்சை முன்பதிவு செய்து இருந்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் மைசூருவில் நடந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சியினர் கலந்து கொள்ள மடிகேரி அரசு போக்குவரத்து கழக பணிமனையின் சார்பில் ஒரு அரசு பஸ் ஒதுக்கப்பட்டது. அந்த பஸ்சை டிரைவர் கோபால கிருஷ்ணன் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் மைசூருவுக்கு சென்று அரசியல் கட்சியினரை இறக்கிவிட்ட பின், கோபால கிருஷ்ணன் பஸ்சை எடுத்துக் கொண்டு மடிகேரி நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

பஸ் கடத்தல்

அவர் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா குசால்நகர் அருகே குட்டேஒசூரு சாலையில் வந்த போது, பஸ்சை சாலையோரம் நிறுத்திவிட்டு அந்தப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று சாப்பிட சென்றதாக தெரிகிறது. மேலும் பஸ்சின் சாவியையும் அவர் பஸ்சிலேயே வைத்து விட்டு சென்றதாக தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த மர்மநபர் பஸ்சில் இருந்த சாவி மூலம் பஸ்சை இயக்கி கடத்தி சென்று விட்டார்.

இதற்கிடையே ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கோபாலகிருஷ்ணன் வெளியே வந்து பார்த்த போது, அங்கு பஸ் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன், அருகில் இருந்தவர்களிடம் பஸ் குறித்து விசாரித்தார். அப்போது யாரும் தங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர். இதையடுத்து யாரோ மர்மநபர் பஸ்சை கடத்தி சென்றது கோபால கிருஷ்ணனுக்கு தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா


இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் குசால்நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் ஓட்டலின் வெளியே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனர். அப்போது இரவு 8 மணி அளவில் மர்மநபர் ஒருவர் பஸ்சை இயக்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதையடுத்து போலீசார், டிரைவர் கோபாலகிருஷ்ணனிடம் பஸ்சின் எண்ணை கேட்டு பெற்றுக் கொண்டனர். மேலும் பஸ்சின் எண்ணை குசால்நகர் சோதனை சாவடியில் உள்ள போலீசாருக்கு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சோதனை சாவடியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, பஸ் சோதனை சாவடியை கடந்து செல்லாதது தெரியவந்தது. இதையடுத்து பஸ் குசால்நகரில் தான் உள்ளது என்பதும் உறுதி செய்யப்பட்டது.

3 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு


இதனை தொடர்ந்து போலீசார் கடத்தப்பட்ட அரசு பஸ்சை தீவிரமாக தேடிவந்தனர். அப்போது குசால்நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆனைகாடு பகுதியில் ஒரு அரசு பஸ் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக குசால்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இரவு 11 மணிக்கு போலீசார், டிரைவர் கோபாலகிருஷ்ணனுடன் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அது கடத்தப்பட்ட பஸ் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் பஸ்சை மீட்டனர். 3 மணி நேரத்திற்கு பிறகு பஸ் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் பஸ்சுக்குள் யாரும் இல்லை. பஸ்சை கடத்திய மர்மநபர் பஸ்சை விட்டுவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து குசால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவத்தால் நேற்று முன்தினம் குசால்நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story