முதுமலை புலிகள் காப்பகத்தில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி மும்முரம்


முதுமலை புலிகள் காப்பகத்தில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 3 Feb 2017 10:15 PM GMT (Updated: 3 Feb 2017 7:50 PM GMT)

முதுமலை புலிகள் காப்பகத்தில் 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக புலிகள் காப்பக துணை கள இயக்குனர் சரவணன் தெரிவித்தார்.

முதுமலை புலிகள் காப்பகம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகமானது 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டு உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வடக்கிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழை காலங்களில் பெய்யும் மழையால் போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதால் வனப்பகுதியும், வனவிலங்குகளும் செழிப்பாக இருக்கும். ஆனால் ஏப்ரல், மே மாதம் கோடைகாலம் என்பதால் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் தட்டுபாடு ஏற்படும்.

கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை முற்றிலுமாக பொய்த்து போனது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. கோடை காலத்திற்கு முன்பாகவே வறட்சி ஏற்பட்டு உள்ளதால் நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதுடன் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் முற்றிலுமாக காய்ந்து எளிதில் தீபற்றும் நிலையில் உள்ளன.

தீத்தடுப்பு கோடுகள்

வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கமும் அதிகரித்து உள்ளது. எனவே இந்த ஆண்டு கோடை காலத்தில் காட்டுத்தீ ஏற்பட்டால் எளிதில் கட்டுப்படுத்தவும், அதனை அணைக்க ஏதுவாக தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் சரவணன் கூறியதாவது:– முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 5 வனச்சரகங்களில் தீபரவாமல் இருக்க குறிப்பிட்ட இடங்களில் வனத்துறை சார்பில் (புற்கள் தீவைத்து எரிக்கப்படுவது) தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் உள்ள கக்கநல்லா எல்லையில் சுமார் 50 அடி அகலத்திற்கு தீத்தடுப்பு கோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கர்நாடக மாநில எல்லையில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் இருந்து காட்டுத்தீ முதுமலை வனப்பகுதியினுள் புகாமல் தடுக்க முடியும். அதேபோல கேரள மாநில எல்லையிலும் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் வனத்துறை ஊழியர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள், தீத்தடுப்பு பணியாளர்கள் உள்பட 100–க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த ஆண்டு முதுமலை புலிகள் காப்பகத்தில் 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் தலைமையில் வனச்சரகர்கள் ஞானதாஸ், ஆரோக்கியசாமி, காந்தன், சடையப்பன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. அது மட்டுமின்றி காட்டுத்தீயை கண்காணிக்க தனிப்பிரிவும் அமைக்கப்பட்டு உள்ளது.


Next Story