குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட காட்டு யானை வனத்துறையினர் விரட்டியடித்தனர்


குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட காட்டு யானை வனத்துறையினர் விரட்டியடித்தனர்
x
தினத்தந்தி 3 Feb 2017 9:30 PM GMT (Updated: 3 Feb 2017 7:50 PM GMT)

கொளப்பள்ளி அருகே குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட காட்டு யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர்.

காட்டு யானை முகாம்

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே குறிஞ்சி நகரில் காட்டு யானை ஒன்று நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு பகுதியில் புகுந்தது. பின்னர் அப்பகுதியில் இருந்த வாழை, தென்னை மரங்களை தின்று சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வன காப்பாளர்கள் பிரகாஷ், ஜெயக்குமார், ராஜரட்ணம், நந்தகுமார், ராமச்சந்திரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த யானை அங்கிருந்து சென்று முருகன் கோவில் வழியாக மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதைத்தொடர்ந்து பட்டாசு வெடித்து காட்டு யானையை வனத்துறையினர் விரட்டினர். இருப்பினும் யானை அங்கிருந்து செல்லவில்லை. இதனால் வனத்துறையினர் சோர்வடைந்தனர்.

பட்டாசு வெடித்து விரட்டியடிப்பு

பின்னர் அதே பகுதியை சேர்ந்த தம்பி கரியான் என்பவரது வீட்டின் அருகே காட்டு யானை நின்று கொண்டிருந்தது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு காட்டு யானையை விரட்டும் பணியை வனத்துறையினர் தொடங்கினர். அப்போது ஆவேசம் அடைந்த காட்டு யானை வனத்துறையினர் மற்றும் பொதுமக்களை துரத்தியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பலகட்ட முயற்சிக்கு பிறகு பகல் 1.30 மணிக்கு காட்டு யானை குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறியது.

தற்போது யானைப்பள்ளம் பகுதியில் காட்டு யானை முகாமிட்டு உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க சம்பந்தப்பட்ட துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story