தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க இயலாது என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்யும்


தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க இயலாது என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்யும்
x
தினத்தந்தி 3 Feb 2017 8:30 PM GMT (Updated: 3 Feb 2017 7:55 PM GMT)

தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க இயலாது என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்யும் என்று மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

பெங்களூரு,

தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க இயலாது என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்யும் என்று மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மேல்முறையீடு மனு

“வட கர்நாடகத்தில் குடிநீருக்காக மகதாயி நதியில் இருந்து 7.56 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை எடுக்க அனுமதி வழங்குமாறு கர்நாடக அரசு கோரியது. இதை மகதாயி நடுவர் மன்றம் நிராகரித்துவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தோம். மீண்டும் நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

எனவே, மகதாயி நடுவர் மன்றத்தில் அடுத்த 15 நாட்களில் நாங்கள் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்வோம். இதற்கு நடுவர் மன்றம் சாதகமான உத்தரவை பிறப்பிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தமிழ்நாட்டிற்கு தினமும் 2 ஆயிரம் கனஅடி காவிரி நீரை திறந்து விடும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அணைகளில் தண்ணீர் இல்லை. எப்படி தண்ணீரை திறக்க முடியும்?. அதனால் தண்ணீரை திறந்துவிட இயலாது என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்யும்.

கர்நாடகத்தின் நலனை காக்க...

காவிரி நீர் பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசு சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் நாரிமன், அனில் தவன் ஆகியோருடன் நாங்கள் ஆலோசனை நடத்தி தேவையான தகவல்களை அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.

எந்தந்த அம்சங்களை கோர்ட்டில் எடுத்து வைக்க வேண்டும் என்பதையும் அவர்களிடம் கூறியுள்ளோம். இந்த பிரச்சினையில் கர்நாடகத்தின் நலனை காக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.”

இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.

Next Story