மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்: பெங்களூருவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்: பெங்களூருவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 3 Feb 2017 8:07 PM GMT (Updated: 3 Feb 2017 8:07 PM GMT)

பாகேபள்ளி அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெங்களூருவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் 2 பேர் பலியானார்கள்.

கோலார் தங்கவயல்,

பாகேபள்ளி அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெங்களூருவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் 2 பேர் பலியானார்கள்.

கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள்

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் கிரண் (வயது 26). அதேப் போல் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா கமட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சோமசேகர் (34). கம்ப்யூட்டர் என்ஜினீயர்களான இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் அனந்தபூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 2 பேரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு திருமணம் முடிந்ததை தொடர்ந்து நேற்று அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு பாகேபள்ளி வழியாக பெங்களூரு நோக்கி இருவரும் மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

2 பேர் பலி

அப்போது பாகேபள்ளி அருகே கோடிகுண்டா சுங்கச்சாவடி அருகே வந்த போது பெங்களூருவில் இருந்து ஐதராபாத்திற்கு சென்ற லாரி, அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட கிரணும், சோமசேகரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

விபத்து நடந்ததும் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகேபள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாகேபள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் விபத்துக்கு காரணமான லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக பாகேபள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

Next Story