திருப்பூரில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு: தடயங்கள் அழிக்கப்பட்டதால் போலீசார் திணறல்


திருப்பூரில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு: தடயங்கள் அழிக்கப்பட்டதால் போலீசார் திணறல்
x
தினத்தந்தி 3 Feb 2017 10:15 PM GMT (Updated: 3 Feb 2017 8:25 PM GMT)

திருப்பூரில் பெண் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பவ இடத்தில் தடயங்கள் அழிக்கப்பட்டதால் துப்பு துலங்காமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

பெண் கொலை

திருப்பூர் கொங்கு மெயின்ரோடு கட்டபொம்மன் நகரில் உள்ள அருள்ஜோதிநகர் 3-வது வீதியை சேர்ந்தவர் சண்முகம்(வயது 51). இவர் செகண்ட்ஸ் பனியன் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி ராணி(36). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ராணி தனது வீட்டுக்கு முன்புறம் சிறிய பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி காலை சண்முகத்தின் குழந்தைகள் பள்ளிக்கு சென்றதும், சண்முகமும் வேலை விஷயமாக வெளியே சென்றுவிட்டார். பின்னர் காலை 11.45 மணி அளவில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டில் தனியாக இருந்த ராணி, சமையல் அறையில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும் வீட்டில் இருந்த ரூ.12 ஆயிரமும் கொள்ளை போயிருந்தது.

தடயங்கள் அழிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, ராணி கொலை செய்யப்பட்ட பின்பு வீட்டுக்குள் படிந்த ரத்தக்கறை தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டு இருந்தது. மேலும் தடயம் எதுவும் கிடைக்காமல் இருப்பதற்காக வீட்டுக்குள் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. முன்புற கதவும் உள்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது.

இதனால் ராணிக்கு தெரிந்தவர்கள் தான் வீட்டுக்குள் புகுந்து அவரை கொலை செய்து விட்டு தடயத்தை அழித்து இருக்கலாமோ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். ராணி கொலை செய்யப்பட்டதை அவருடைய கணவர் சண்முகம்தான் முதலில் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் சண்முகத்திடமும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

போலீசார் திணறல்

சம்பவ இடத்தில் தடயங்கள் அழிக்கப்பட்டு இருந்ததால் குற்றவாளிகள் குறித்து எந்த துப்பும் துலங்காமல் போலீசார் திணறி வருகிறார்கள். இதற்கிடையே ராணி சிலருக்கு பணத்தை கடன் கொடுத்து இருந்ததாக தெரியவரவே, பணப்பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ? என்ற கோணத்திலும் தற்போது போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

ஏற்கனவே அதே பகுதியில் அ.தி.மு.க. கவுன்சிலர் காட்டன் முத்து கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்தேதி கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்து 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்காததால், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் அந்த வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர். இதுபோல், நிதிநிறுவன அதிபர் பழனிச்சாமி கொலை வழக்கிலும் அதே நிலைதான் நீடிக்கிறது.

இந்த நிலையில் இந்த வழக்கும் அதுபோல் கிடப்பில் போடாமல் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story