திருப்பூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் பொதுமக்கள் சாலைமறியல்


திருப்பூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 3 Feb 2017 9:30 PM GMT (Updated: 3 Feb 2017 8:25 PM GMT)

திருப்பூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீரில் கழிவுநீர்

திருப்பூர் மாநகராட்சி 13-வது வார்டு விவேகானந்தா நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், குடியிருப்பு முன்பு பெரிய குழிதோண்டி அதில் கழிவுநீர் தேக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த கழிவுநீர் அங்குள்ள குடிநீர் குழாய்க்குள் புகுந்து, குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, குடியிருப்பின் நிர்வாகம் குழாய் மூலம் கழிவுநீரை அருகில் உள்ள வடிகாலுக்கு கொண்டு செல்வதாக கூறினார்கள். அதற்கு அந்த பகுதியில் இருந்த வக்கீல் ஒருவர், தனது வீட்டின் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

பரபரப்பு

இதற்கிடையே அந்த வக்கீல் வீட்டின் முன்பு அமைய இருந்த புதிய மின்கம்பம் ஒன்றை அவர் மின்வாரிய ஊழியர்களிடம் கூறி சற்று தள்ளி அமைத்ததாக தெரிகிறது. இதை அறிந்த பொதுமக்கள், மின்வாரிய அதிகாரிகளை அழைத்து, அந்த மின்கம்பத்தை அந்த வக்கீலின் வீட்டின் முன்பு அமைக்க கூறினார்கள். இதனால் அவர் அமைதியானார்.

பின்னர் பொதுமக்கள் துணையுடன் கழிவுநீர் பாதுகாப்பாக செல்ல குழாய் அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story