பெங்களூருவில் பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்: காரில் சென்ற ஏ.பி.எம்.சி. தலைவர் உள்பட 2 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர்


பெங்களூருவில் பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்: காரில் சென்ற ஏ.பி.எம்.சி. தலைவர் உள்பட 2 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர்
x
தினத்தந்தி 3 Feb 2017 8:33 PM GMT (Updated: 3 Feb 2017 8:33 PM GMT)

பெங்களூருவில், காரில் சென்ற ஏ.பி.எம்.சி. தலைவர் உள்பட 2 பேரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூருவில், காரில் சென்ற ஏ.பி.எம்.சி. தலைவர் உள்பட 2 பேரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

துப்பாக்கியால் சுட்டனர்


பெங்களூரு தாசனபுராவில் உள்ள ஏ.பி.எம்.சி. (விவசாய விளைபொருள் விற்பனை கமிட்டி) தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் கடபகெரே சீனிவாஸ். பா.ஜனதா பிரமுகரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இவர், அரசு காரில் நேற்று மதியம் 12 மணி அளவில் பெங்களூரு வந்துவிட்டு கடபகெரே கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் மூர்த்தி ஓட்டினார். எலகங்கா கோகிலு கிராசில் சென்றபோது போக்குவரத்து சிக்னலுக்காக டிரைவர் காரை நிறுத்தினார்.

இந்த வேளையில், அவருடைய காரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர், சீனிவாசின் கார் அருகே நின்றனர். அப்போது, மோட்டார் சைக்கிளின் பின்புறம் இருந்த மர்மநபர் திடீரென்று தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர்கள் இருந்த காரை நோக்கி தொடர்ச்சியாக சுட்டார். அதனைத்தொடர்ந்து, கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் அதே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுவிட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

இதற்கிடையே, மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காரின் முன்புறம் இருந்த கடபகெரே சீனிவாஸ் மற்றும் டிரைவர் மூர்த்தி ஆகியோர் குண்டு காயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஓடிவந்து குண்டு காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஹெப்பாலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சீனிவாஸ் மீது 3 குண்டுகளும், டிரைவர் மூர்த்தி மீது ஒரு குண்டும் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

மாநகர போலீஸ் கமிஷனர் பார்வையிட்டார்

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் எலகங்கா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்தில் உடைந்து கிடந்த கார் கண்ணாடி துண்டுகள், சிதறி கிடந்த துப்பாக்கி குண்டுகளை சுற்றி தடுப்பு வேலிகளை போலீசார் அமைத்தனர். மேலும், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட், பெங்களூரு மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் மாலினி கிருஷ்ணமூர்த்தி, பெங்களூரு வட-கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ஹர்சா உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்தில் சிதறி கிடந்த துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் ஹர்சா கூறுகையில், ‘கடபகெரே சீனிவாஸ் பயணித்த காரை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் துப்பாக்கியால் 6 முறை சுட்டுள்ளனர். சம்பவ இடத்தில் கிடந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம்‘ என்றார்.

தனிப்படைகள்

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி மர்மநபர்களை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் உதவியுடன் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி மர்மநபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும், சீனிவாஸ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை உள்பட 13 வழக்குகள் பதிவாகி இருந்ததும், அவருடைய பெயர் மாதநாயக்கனஹள்ளி போலீஸ் நிலையத்தில் இதற்கு முன்பு ரவுடி பட்டியலில் இருந்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அவருடைய சகோதரரான பாய்சன் ராம் என்பவரின் பெயரும் மாதநாயக்கனஹள்ளி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இருக்கிறது. இதனால் முன்விரோதம் காரணமாக சம்பவம் நடந்து இருக்கலாம் எனவும், அவர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததால் அரசியல் காழ்புணர்ச்சியாலும் சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, சீனிவாஸ் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் அவருடைய சகோதரரான பாய்சன் ராமை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாகன சோதனை

மேலும், மர்மநபர்கள் தப்பித்து செல்லாமல் இருக்க பெங்களூரு நகர் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த சம்பவம் குறித்து எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாஸ் சென்ற காரை பறிமுதல் செய்தனர். காரில் சென்ற ஏ.பி.எம்.சி. தலைவர் உள்பட 2 பேரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு சென்ற சம்பவம் பெங்களூருவில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story