மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Feb 2017 9:03 PM GMT (Updated: 3 Feb 2017 9:03 PM GMT)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ–மாணவிகள் சாலை மறியல்.

ஆவடி,

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ–மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாலியல் தொல்லை புகார்

பூந்தமல்லியை அடுத்த மாங்காடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஜம்புலிங்கம் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், சாதியை சொல்லி இழிவாக பேசியதுடன், மாணவ–மாணவிகளை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி வற்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்களின் பெற்றோர் மற்றும் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கல்வித்துறை, போலீசார் உள்ளிட்டோருக்கு புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல்

மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று காலை சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் தலைவி கலைசெல்வி, இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியை சேர்ந்த ராஜாஜி மற்றும் மாணவ–மாணவிகள் பள்ளி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பின்னர் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story