ஒரு படகுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை


ஒரு படகுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 3 Feb 2017 10:15 PM GMT (Updated: 3 Feb 2017 10:03 PM GMT)

துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி நடைபெறவில்லை. எனவே ஒரு படகுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி நடைபெறவில்லை. எனவே ஒரு படகுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தொடர் மோதல்

புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கும் கவர்னருக்கும் இடையேயான தொடர் மோதல் காரணமாக மத்திய அரசு புதுச்சேரி மீது அக்கறை இல்லாமல் இருப்பதாக தெரிகிறது. முதல்–அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் மத்திய மந்திரிகளை சந்தித்து பல்வேறு திட்டங்களுக்காக கோடிக்கணக்கில் நிதியை கேட்டுள்ளதாக தொடர்ந்து மக்களுக்கு தெரிவித்து வந்தார். குறிப்பாக இந்த ஆண்டு ரூ.ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்க பிரதமரை சந்தித்து கேட்டுள்ளதாக தெரிவித்தார். கவர்னரும் மத்திய மந்திரிகளை சந்தித்து பல திட்டங்களை புதுச்சேரி மாநிலத்திற்கு நிறைவேற்ற வலியுறுத்தியதாக கூறியிருந்தார்.

இருவரின் மாறுபட்ட செயலினால் மத்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட புதுச்சேரிக்கு அதிகப்படியாக ஒதுக்கித் தரவில்லை. குறிப்பாக மத்திய அரசு திட்ட செலவினங்களுக்காக ரூ.805 கோடி, திட்டமில்லா செலவுகளுக்காக ரூ.513 கோடி, கடனாக ரூ.72 கோடி என மொத்தமாக ரூ.1,390 கோடி மட்டுமே இந்த ஆண்டும் ஒதுக்கி கொடுத்துள்ளது. கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் இதே தொகைதான் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. 2015–ம் ஆண்டு புதுவையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போதைய முதல்–அமைச்சர் ரங்கசாமி ரூ.140 கோடி நிவாரணமாக வழங்கியிருந்தார். அதற்கு இழப்பீட்டு தொகை வழங்கும்படியும் மத்திய அரசிடம் கேட்டு இருந்தார். அதில் ரூ.35 கோடியை தற்போது கூடுதலாக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

ரூ.30ஆயிரம் நிவாரணம்

மத்திய அரசின் டிரட்ஜிங் கார்ப்ரே‌ஷன் நிறுவனத்திடம் துறைமுகம் தூர்வாரும் பணியை கவர்னர் ஒப்படைத்துள்ளார். அதன் பின்னர் அந்த பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 500 கியூபிக் மீட்டர் மண் அகற்ற வேண்டும். ஆனால் இதுவரை மணல் அகற்றப்படவில்லை. வெறும் தண்ணீரை மட்டுமே அந்த எந்திரம் அகற்றி வருகிறது. எனவே துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி நடைபெறவில்லை.

துறைமு முகத்துவாரம் தூர்வாராமல் இருப்பதால் 4 மாதங்களாக மீனவர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் ரூ.25 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஒரு அமைச்சரே தெரிவித்துள்ளார். அரசே ஒப்புக்கொண்டுள்ளதால் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். எனவே ஒரு படகுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அந்த படகுகளில் வேலைக்கு செல்லும் மீனவர்களுக்கு மாதம் தலா ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும்.

அமைச்சர்கள் மார்க் துறைமுகத்தில் உள்ள தூர்வாரும் கப்பலின் மூலம் புதுச்சேரி துறைமுகத்தை தூர்வார முயற்சிக்கின்றனர். அதையும் கவர்னர் தடுத்து வருகின்றார். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லை. அதற்கு முதல்வரும், கவர்னரும் பொறுப்பேற்க வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் பீதி

புதுச்சேரி முழுக்க தற்போது பன்றிக்காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. அதை போக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவ கல்லூரியிலும் பன்றிக்காய்ச்சலுக்கான ரத்த பரிசோதனை செய்ய கருவி இல்லை. இதனால் ஜிப்மருக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கிருந்து முடிவு வருவதற்குள் பன்றிக்காய்ச்சல் முற்றி விடுகிறது.

32 படுக்கை கொண்ட அரசு மருத்துவமனை வார்டில் 100 பேர் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரே படுக்கையில் 3 பேரும், தரையிலும் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் நோய் பரவி வருகிறது. கிராமப்புற மருத்துவமனைகளில் அடிப்படை வசதியில்லை. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story