நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று, உடலை வீட்டுக்குள் புதைத்த கணவர் கைது


நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று, உடலை வீட்டுக்குள் புதைத்த கணவர் கைது
x
தினத்தந்தி 3 Feb 2017 10:19 PM GMT (Updated: 3 Feb 2017 10:19 PM GMT)

டோங்கிரி பாடாவில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்து உடலை வீட்டுக்குள் புதைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

வசாய்,

டோங்கிரி பாடாவில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்து உடலை வீட்டுக்குள் புதைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

காணாமல் போன பெண்

பால்கர் மாவட்டம் டோங்கிரி பாடா பகுதியை சேர்ந்தவர் சாடு(வயது35). இவரது மனைவி சங்கீதா(30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சாடு கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குழந்தைகளுடன் வெளியே சென்றுவிட்டார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து சங்கீதாவின் தங்கை லாகினி தனது அக்காளை தொடர்பு கொள்ள முயன்றார். அது முடியாமல் போனது.

இந்தநிலையில் 2 மாதத்துக்கு பிறகு கடந்த 31-ந்தேதி சாடு தனது குழந்தைகளுடன் மீண்டும் வீட்டிற்கு வந்தார். இதுபற்றி அறிந்த லாகினி அங்கு சென்று, சாடுவிடம் தனது அக்காள் எங்கே? என கேட்டு உள்ளார்.

அதற்கு சாடு, வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்து சங்கீதா ஓடிப்போய் விட்டதாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த லாகினி தலசேரி போலீஸ் நிலையத்தில் சங்கீதா காணாமல் போனதாகவும், அவரது கணவர் சாடு மீது சந்தேகம் இருப்பதாகவும் புகார் கொடுத்தார்.

நடத்தையில் சந்தேகம்

இந்த புகாரின்பேரில் போலீசார் சாடுவை அழைத்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது வீட்டுக்குள் குழி தோண்டி மூடப்பட்டு இருந்த தடயம் தென்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சாடுவை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் மனைவி சங்கீதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொலை செய்து வீட்டுக்குள் குழி தோண்டி புதைத்துவிட்டு, கடந்த 2 மாதங்களாக வசாயில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வீட்டுக்குள் புதைத்து வைத்திருந்த சங்கீதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சாடுவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story