கட்டணம் செலுத்தாத அரசியல்வாதிகளுக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதை எதிர்த்து வழக்கு


கட்டணம் செலுத்தாத அரசியல்வாதிகளுக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதை எதிர்த்து வழக்கு
x
தினத்தந்தி 3 Feb 2017 10:47 PM GMT (Updated: 3 Feb 2017 10:47 PM GMT)

பாதுகாப்பு கட்டணம் செலுத்தாத அரசியல்வாதிகளுக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

மும்பை,

பாதுகாப்பு கட்டணம் செலுத்தாத அரசியல்வாதிகளுக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

பொதுநலன் வழக்கு

சமூக ஆர்வலரான சன்னி புனாமியா என்பவர் மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

மராட்டியத்தில் முக்கிய பிரமுகர்கள் உள்பட அரசியல் பிரமுகர்கள் பலருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பிற்காக அவர்கள் கட்டணம் செலுத்தவேண்டும். ஆனால் கடந்த 2005-ம் ஆண்டு முதல் பல அரசியல் பிரமுகர்கள் அவர்களின் பாதுகாப்பிற்கான கட்டணத்தை சரிவர செலுத்தவில்லை. இருந்தும் அவர்களுக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோர்ட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதி குல்கர்னி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அரசுக்கு கண்டனம்

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், “நீங்கள்( அரசு) போலீஸ் துறையை ஒன்றும் முக்கிய பிரமுகர்களுக்காக மட்டுமே நடத்தவில்லை. அனைத்து தரப்பு மக்களுக்காகவும் நடத்துகிறீர்கள். குறிப்பிட்ட நபர்களுக்காக நடத்தினால் புதிய துறையை உருவாக்குங்கள். அரசியல்வாதிகள் பாதுகாப்பு கட்டணத்தை கட்ட தவறினால், அவர்களின் கட்சியிடம் இருந்து அதற்கான தொகையை வசூல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசு கருவூலத்திற்கு இழப்பு

எதனால் கட்டணம் முறையாக வசூல் செய்யப்படவில்லை? என தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம். அவர்களால் கட்டண தொகையை செலுத்த முடியவில்லையா? அல்லது அரசு அவர்களை முக்கிய பிரமுகர்கள் போல நடத்த விரும்புகிறதா?

போலீஸ் பாதுகாப்பு தனி மனிதனுக்கானது அல்ல என்பது மட்டும் எங்களின் பார்வையில் இல்லை. அரசின் கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுவதையும் நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்” என்றனர்.

இதற்கு பதில் அளித்த அரசு வக்கீல், “பாதுகாப்பிற்கான கட்டணத்தை செலுத்தாவிட்டாலும், உயிருக்கு ஆபத்து இருக்கும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

இதையடுத்து வழக்கை சில வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story