நிலத்தடியில் விளையும் காய்கறிகளின் நன்மைகள்


நிலத்தடியில் விளையும் காய்கறிகளின் நன்மைகள்
x
தினத்தந்தி 4 Feb 2017 7:46 AM GMT (Updated: 4 Feb 2017 7:46 AM GMT)

பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளை சிலர் தவிர்ப்பார்கள். ஆனால் அது சரியல்ல. காரணம், அக்காய் கறிகளில் நிறைய மருத்துவ நன்மைகள் அடங்கி யருக்கின்றன.

அதுகுறித்துப் பார்ப்போம்...

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கில் உடலுக்கு வெப்பம்தரும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. மாவுச்சத்து அதிகம் உள்ளதால், அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் ஏற்படும் வீக்கத்தையும், அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணமாக்குகிறது. மேலும் உருளைக்கிழங்கில் அதிக கலோரிகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.

கருணைக்கிழங்கு:

கருணைக்கிழங்கை உண்பதால் கபம், வாதம், மூலம் போன்றவற்றில் இருந்து குணம் பெறலாம். மேலும் கருணைக் கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்குப் பலம் சேர்க்கும். கருணைக்கிழங்கைச் சமைக்கும்போது சிறிது புளி சேர்த்துச் சமைத்தால் அரிப்புத் தன்மை நீங்கும்.

பீட்ரூட்:

நிலத்தடியில் விளையும் ஒருவகை கிழங்கான பீட்ரூட், மலச்சிக்கலைக் குணப்படுத்தும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

முள்ளங்கி:

முள்ளங்கியின் வாசம் காரணமாக சிலர் அதை சமைத்துச் சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் முள்ளங்கி, தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்குவதோடு குரலை தெளிவாக்கும். பசியைத் தூண்டும். சிறுநீரகக் கற்களை கரையச் செய்யும். அதிக நோய் எதிர்ப்புச் சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துகளும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன.

கேரட்:

கேரட்டில் வைட்டமின் ஏ, கே, பி1, பி2, பி6, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. புற்றுநோய் எதிர்ப்புச் சக்தியும் உள்ளது. எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றுநோய் மற்றும் மாலைக்கண்நோய் வருவதைத் தடுக்கலாம்.

இஞ்சி:

அன்றாடம் சமையலில் சேர்க்கப்படும் இஞ்சி, இரைப்பைக்குப் பலம் சேர்க்கும். பசியைத் தூண்டும். அஜீரணத்தைப் போக்கும். கபத்தைக் குணப்படுத்தும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கைச் சரிசெய்யும்.

Next Story