ராமநாதபுரம் நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் திருட்டு; 55 மின் மோட்டார்கள் பறிமுதல்
ராமநாதபுரம் நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் திருட்டில் ஈடுபட்டவர்களை அதிகாரிகள் கண்டறிந்து 55 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம்,
குடிநீர்ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு போனதோடு, கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடை காலத்திற்கு முன்னரே நீலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. குடிநீருக்கு மட்டுமின்றி அன்றாடம் உபயோகப்படுத்தும் நீருக்கும் அலையாய் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களின் அவதியை போக்கும் வகையில் காவிரி குடிநீர் திட்டத்தின் கீழ் பெறப்படும் குடிநீரை பிரித்து ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் வினியோகம் செய்யவருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் குடிநீரை சிலர் மின்மோட்டார் மூலம் உறிஞ்சி விடுவதோடு, அன்றாட பணிகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இதன்காரணமாக அனைவருக்கும் தண்ணீர் கிடைக்காமல் போய்விடுகிறது.
மின்மோட்டார்கள் பறிமுதல்இதனைதொடர்ந்து நகரசபை ஆணையாளர் அப்துல்ரசீது தலைமையில் நகராட்சி பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் சுப்பிரமணியபிரபு மற்றும் ஊழியர்கள் ஒவ்வொரு வார்டு பகுதிகளுக்கும் சென்று அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது நகராட்சி மூலம் வினியோகிக்கப்படும் காவிரி குடிநீரை சிலர் சட்டவிரோதமாக மின் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுப்பது தெரியவந்தது.
ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் உள்ள வனசங்கரி அம்மன் கோவில் தெரு, தையல்பாகம்பிள்ளை தெரு, தெற்குமுனியசாமி கோவில் தெரு, குண்டுக்கரை முருகன்கோவில் தெரு, காந்தாரிஅம்மன்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரை உறிஞ்சி எடுக்க பயன்படுத்திய 55 மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகரசபை ஆணையாளர் அப்துல்ரசீது எச்சரித்துள்ளார்.