பட்டாசு கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகளை தளர்த்தக்கோரி சிவகாசியில் இன்று உண்ணாவிரதம் வர்த்தக சங்கங்களும் கடை அடைப்பு நடத்த முடிவு


பட்டாசு கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகளை தளர்த்தக்கோரி சிவகாசியில் இன்று உண்ணாவிரதம் வர்த்தக சங்கங்களும் கடை அடைப்பு நடத்த முடிவு
x
தினத்தந்தி 28 Feb 2017 10:45 PM GMT (Updated: 28 Feb 2017 2:07 PM GMT)

பட்டாசு கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகளை தளர்த்தக்கோரி

சிவகாசி,

புதிய விதிகள்

பட்டாசு கடைகளுக்கு விதிக்கப்படவுள்ள புதிய விதிகளை தளர்த்தக்கோரி பட்டாசு கடைகளை அடைத்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து ஆலை அதிபர்களும் ஆலைகளை மூடி போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் மூலம் பட்டாசு தொழில் முற்றிலுமாக பாதிப்பு அடைந்துள்ளது. நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட குழு வெடிப்பொருள் விதிகள் மற்றும் செயல்முறைகள் பற்றி அறிந்திருக்கவில்லை, தக்க அறிவியல் ஆராய்ச்சிகளோ வல்லுநர்களின் கருத்தோ தொழில் சார்ந்த எவரிடமும் ஆலோசிக்காமல் தங்களுடைய பரிந்துரைகளால் நாட்டில் உள்ள அனைத்து பட்டாசு கடைகளும் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று இவர்களது தரப்பில் கூறப்படுகிறது.

பட்டாசு கடைகளுக்கான புதிய வரைவு விதிகள் பற்றி நாட்டில் உள்ள அனைத்து பட்டாசு விற்பனையாளருக்கும் தற்போது தெரிய வந்துள்ளதால் தொழிற்சாலைகளில் பட்டாசு வாங்க யாரும் முன் வரவில்லை. பட்டாசு கொள்முதல் செய்ய தொழிற்சாலைகளுக்கு கொடுத்த பணத்தையும் விற்பனையாளர்கள் திரும்ப கேட்கும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

நிராகரிக்க வேண்டும்....

இதனால் பட்டாசு கடைகளும் தொழிற்சாலைகளும் வேறு வழியின்றி கடந்த 12 நாட்களாக மூடி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனால் பட்டாசு உற்பத்தியில் ரூ.200 கோடி இழப்பும், சார்பு தொழில்களும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. புதிய வரைவு விதிகள் நடைமுறைக்கு முன்னரே ஒட்டு மொத்தமாக பட்டாசு தொழில் மற்றும் சார்பு தொழில்கள் முடங்கி 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இதற்கு தீர்வாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு நீதிமன்ற நியமன குழுவின் பரிந்துரைகள் சாத்தியமில்லாதவை என நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

உண்ணாவிரதம்

ஒட்டுமொத்தமாக பட்டாசு கடைகளையும் தொழிற்சாலைகளையும் மூடுவது அரசின் கொள்கை முடிவு அல்ல என்பதை தெளிவுபடுத்தி தொழிலை காப்பாற்ற வேண்டுமென பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தங்களது எதிர்ப்பினை அரசுக்கு வெளிப்படுத்தும் வகையில் இன்று (புதன்கிழமை) பட்டாசு கடைகளிலும் ஆலைகளிலும் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை திருத்தங்கல் குறுக்குப்பாதை திடலில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள வர்த்தக சங்கங்கள் மற்றும் தனியார் அமைப்புகள், அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். வர்த்தக சங்கத்தினர் கடைகளை அடைத்து போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.


Next Story