1,28,244 விவசாயிகளுக்கு ரூ.69½ கோடி வறட்சி நிவாரணத் தொகை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்


1,28,244 விவசாயிகளுக்கு ரூ.69½ கோடி வறட்சி நிவாரணத் தொகை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்
x
தினத்தந்தி 7 March 2017 11:15 PM GMT (Updated: 7 March 2017 1:01 PM GMT)

1,28,244 விவசாயிகளுக்கு ரூ.69 கோடியே 51 லட்சம் வறட்சி நிவாரணத்தொகையை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை,

வறட்சி நிவாரணத் தொகை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தொகை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பழனி தலைமை தாங்கினார். வனரோஜா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி, தூசி மோகன், வி.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாவட்டத்தில் 1,28,244 விவசாயிகளுக்கு ரூ.69 கோடியே 51 லட்சம் வறட்சி நிவாரணத்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கி பேசியதாவது:–

ரூ.69 கோடியே 51 லட்சம்

திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டமாகும். மாவட்டத்தின் 40 சதவீதம் விவசாயம் செய்யப்படும் பரப்பளவாக உள்ளது. விவசாயிகள் உழைப்பை நம்பி மாவட்டத்தில் ஏராளமான அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள், கரும்பு ஆலைகளும் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் வழக்கத்தை விட கடந்த ஆண்டில் 60 சதவீத மழைதான் பெய்தது. அதனால் வானத்தை நம்பி பயிர் செய்த விவசாயிகளின் வாழ்க்கையில் வறட்சி ஏற்பட்டது.

எனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 1,28,244 விவசாயிகளுக்கு ரூ.69 கோடியே 51 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்பட உள்ளது.

சொட்டுநீர் பாசனம்

விவசாயிகள் வறட்சியை சமாளிக்க சொட்டுநீர் பாசன திட்டத்தை பயன்படுத்தலாம். இதன் மூலம் விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீரில் அதிகப் பரப்பளவில் பயிர் செய்யலாம். அரசு 100 சதவீதம் மானியத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் வழங்குகிறது. இதில் அதிகபட்சமாக ஒரு எக்டேருக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொட்டு நீர் பாசன திட்டத்திற்காக 2016–17–ம் ஆண்டுக்கு மாவட்டத்திற்கு ரூ.18 கோடியே 93 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு தற்போது பயிறு வகை சிறப்பு தொகுப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,250 ஏக்கரில் ரூ.65 லட்சம் மானிய மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 1 ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. வறட்சியை சமாளிக்கவும், விவசாயம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

அதைத்தொடர்ந்து வேளாண்மைத்துறை சார்பில் 63 விவசாயிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான உளுந்து செயல் விளக்கம், விசை உழுவை, தெளிப்பு நீர் பாசன கருவி, மழை தூவுவான் கருவி, விசை தெளிப்பான்களும், தோட்டக்கலைத்துறை சார்பாக 16 விவசாயிகளுக்கு ரூ.38 ஆயிரம் மதிப்பிலான காய்கறி விதைகளும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தண்டராம்பட்டு வட்டம் கீழ்ராவந்தவாடி கிராமத்தை சேர்ந்த 25 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் ஆகியவற்றை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

இதில் வணிகவரி ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் பெருமாள் நகர் ராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் நைனாக்கண்ணு, நகர செயலாளர் செல்வம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story