விழுப்புரத்தில் அரசு பஸ்சின் முன்பகுதி திடீரென கழன்று விழுந்ததால் பரபரப்பு


விழுப்புரத்தில் அரசு பஸ்சின் முன்பகுதி திடீரென கழன்று விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 March 2017 11:30 PM GMT (Updated: 7 March 2017 1:57 PM GMT)

விழுப்புரத்தில் அரசு பஸ்சின் முன்பகுதி திடீரென கழன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

அரசு பஸ்

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று செஞ்சி அருகே அனந்தபுரத்திற்கு புறப்பட்டது. பஸ்சில் 40–க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த பஸ் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் ஒரு வளைவில் திரும்பும்போது எதிரே சென்னை மார்க்கத்தில் இருந்து அதிவேகமாக வந்த லாரி திடீரென எல்லீஸ்சத்திரம் சாலையில் திரும்பியது. இதை சற்றும் எதிர்பாராத பஸ் டிரைவர், லாரி மீது மோதாமல் இருக்க திடீரென ‘பிரேக்’ போட்டார்.

முன்பகுதி கழன்றதால் பரபரப்பு

இதில் பஸ்சின் முன்பகுதி பம்பர் மற்றும் தகரம் ஆகியவை கழன்று நடுரோட்டில் கீழே விழுந்தது. பஸ்சின் கண்ணாடி மட்டும் ஒட்டிக்கொண்டிருந்த நிலையில் காணப்பட்டது. இதை பார்த்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து கீழே இறங்கினார்கள்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாற்று பஸ்சை வரவழைத்து அந்த பஸ்சில் பயணிகள் அனைவரையும் அனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சேதமடைந்த பஸ், அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பஸ்சின் முன்பகுதி கழன்றதால் பெரும் விபத்து ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பியது. ஒருவேளை பஸ்சின் பக்கவாட்டு பகுதி கழன்றாலோ அல்லது பஸ்சினுள் ஓட்டை விழுந்தாலோ பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் சேதமாகியிருக்கும். இதுபோன்று மிகவும் பழுதடைந்த பஸ்களையே கிராமப்புறங்களுக்கு இயக்கி வருகின்றனர். இதனால் பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே இதுபோன்ற பஸ்களை நல்லமுறை பராமரிப்பு பணி மேற்கொண்டு இயக்க வேண்டும் என்றனர்.

ஓடும் பஸ்சின் முன்பகுதி திடீரென கழன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story